மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடகாவை கண்டித்து தண்ணீர் பானையை உடைத்து விவசாயிகள் போராட்டம்: தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

தஞ்சை: மேகதாட்டில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு செய்து, தண்ணீர் பானையை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார்.

முன்னதாக கூட்டம் துவங்கியதும்,  தமிழக சட்டமன்றத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக, ஒன்றிய அரசுகளை கண்டித்து வெளிநடப்பு செய்வதாக கூறி அனைத்து விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கோஷம் எழுப்பியவாறு கூட்ட அரங்கிலிருந்து வெளியேறினர்.

பின்னர் கர்நாடக மற்றும் ஒன்றிய அரசுகளை கண்டித்து சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதே போல் காவிரி நீர் தமிழக மக்களின் உயிர் நீர் என நோட்டீஸ் ஒட்டிய தண்ணீர் பானையுடன் வந்த தமிழக விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில துணை தலைவர் சுகுமாறன் தலைமையிலான விவசாயிகள், காவிரியின் குறுக்கே ரூ.1000 கோடியில் மேகதாது அணை கட்டுவதை உடனே ஒன்றிய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

காவிரி நீரை நம்பி வாழும் நான்கரை கோடி மக்களை காப்பாற்ற வேண்டும். பானை தண்ணீர் கூட இல்லாத நிலையில் பானை எதற்கு? என கோஷமிட்டவாறு தண்ணீர் பானைகளை போட்டு உடைத்ததால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டத்திற்கு பின்னர் விவசாயிகள் அனைவரும் கூட்ட அரங்கிற்கு சென்று குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Related Stories: