×

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: காங்கிரஸ், திமுக எம்பி.க்கள் மக்களவையில் வெளிநடப்பு

புதுடெல்லி: பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் விலைகள் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தன. ஐந்து மாநில  சட்டபேரவைகளுக்கு தேர்தல் நடந்ததால் கடந்த நான்கரை மாதங்களாக பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்த்தப்படவில்லை. இந்நிலையில், கடந்த 4 நாட்களாக இவற்றின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.

மக்களவையில் இப்பிரச்னையை நேற்று எழுப்பிய காங்கிரஸ் உறுப்பினர் கவுரவ் கோகோய், ‘கொரோனாவால் கடுமையான பொருளாதார பாதிப்புகளை சந்தித்த மக்கள் இப்போதுதான் அதில் இருந்து மீண்டு வருகின்றனர். இந்நிலையில், 137 நாட்களுக்கு பின், ஒரே வாரத்தில் பெட்ரோல், டீசல், காஸ் விலைகள் 3 முறை உயர்த்தப்பட்டது ஏன்? ரஷ்யா-உக்ரைனுக்கு இடையே கடந்த ஆண்டில் இருந்தே பிரச்னை இருந்து வருகிறது.

ஆனால், அதை காரணம் காட்டி விலை உயர்த்தி உள்ளனர். இனி எத்தனை முறை விலை உயர்த்த போகிறார்களோ  என தெரியவில்லை,’’  என்றார். இந்த விவகாரம் தொடர்பாக  ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளிக்க வேண்டும் என்று காங்., திமுக, தேசியவாத காங்., இடது சாரிகள், விடுதலை சிறுத்தைகள்  உள்ளிட்ட  கட்சி எம்பி.க்கள்  கோரிக்கை விடுத்தனர். பின்னர், விலை உயர்வை கண்டித்து அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.

பாஜ பெண் எம்பி கதறல்
மேற்கு வங்க மாநிலம், பிர்பும் மாவட்டத்தில்  8 பேர் தீ வைத்து எரித்து கொல்லப்பட்டது தொடர்பாக பாஜ எம்பி ரூபா கங்குலி மாநிலங்களவையில் நேற்று பேசும்போது, திடீரென கண்ணீர் விட்டு கதறி அழுதார். ‘மேற்கு வங்கத்தில் நடப்பது அரசியல் படுகொலைகள்,’ என்று அவர் குற்றம்சாட்டினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திரிணாமுல் காங். உறுப்பினர்கள்  கோஷங்களை எழுப்பியபடி அவையின் மைய பகுதிக்கு வந்தனர். இதன் காரணமாக  அமளி ஏற்பட்டதால் 25 நிமிடங்களுக்கு அவை ஒத்திவைக்கப்பட்டது. 


Tags : Congress ,DMK ,Lok Sabha , Petrol, diesel price hike: Congress, DMK MPs walk out of Lok Sabha
× RELATED மக்களவைத் தேர்தல்: உண்மையான...