×

நடிகையானாலும் குற்றம் சாட்டப்பட்டவர்தானே: கங்கனாவுக்கு கோர்ட் கண்டிப்பு

மும்பை: நீங்கள் நடிகையாக இருக்கலாம். ஆனால், ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர் என்பதை ஒரு போதும் மறந்து விடக் கூடாது என்று, மான நஷ்ட வழக்கில் ஆஜராக நிரந்தர விலக்கு கேட்ட கங்கனாவை கோர்ட் கண்டித்துள்ளது. பாலிவுட் நடிகை கங்கனா ரனவத் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், இந்தி திரைப்பட பாடலாசிரியர் ஜாவேத் அக்தரை இழிவு படுத்தும் விதமாக கருத்து தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து ஜாவேத் அக்தர் கடந்த 2020ம் ஆண்டு நவம்பரில் நடிகை கங்கனாவுக்கு எதிராக அந்தேரி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார்.

இந்த நிலையில், ஜாவேத் அக்தர் தாக்கல் செய்த மனு மீது முன்பு விசாரணை நடத்திய அந்தேரி மாஜிஸ்திரேட், ஆஜராகாத நடிகை கங்கனாவை கண்டித்தார். இனி ஆஜராக தவறினால், கங்கனாவை கைது செய்ய வாரன்ட் பிறப்பிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், ‘பிரபல இந்தி நடிகையான நான் தொழில்ரீதியாக பல்வேறு நாடுகளுக்கு செல்ல வேண்டி இருப்பதால், இந்த வழக்கில் ஆஜராவதில் இருந்து நிரந்தரமாக விலக்கு அளிக்க வேண்டும்’ என்று கோரி மெட்ரோபாலிட்டன் கோர்ட்டில் கங்கனா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் ஆர்.ஆர்.கான், நேற்று முன்தினம் மனுவை தள்ளுபடி செய்தார். இது தொடர்பாக நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியிருப்பதாவது: குற்றம் சாட்டப்பட்டவர் நிரந்தரமாக ஆஜராவதில் இருந்து விலக்கு கோர உரிமை இல்லை. அவரது ஜாமீன் பத்திரத்தில் இடம்பெற்றுள்ள சட்ட விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படி பின்பற்ற வேண்டும். இன்றுவரை குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜர் ஆகவில்லை. நடிகை மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், விசாரணைக்கு ஒத்துழைக்கும் நோக்கமின்றி செயல்படுகிறார்.

அவர் பிரபலமானவர் என்பதில் சந்தேகம் இல்லை. அவருக்கு தொழில்ரீதியாக பல்வேறு திட்டங்கள் இருக்கலாம். ஆனால், அவர் இந்த வழக்கில் குற்றவாளி என்பதை மறந்துவிடக் கூடாது. இந்த வழக்கு விசாரணை சிறப்பாக நடைபெற அவரது ஒத்துழைப்பு மிகவும் அவசியம். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு இருந்தது.

Tags : Kangana Ranaut , Actress but accused: Kangana Ranaut sentenced by court
× RELATED நான் மாட்டிறைச்சி சாப்பிடாத பெருமைமிக்க இந்து: கங்கனா ரணாவத்