×

அமெரிக்காவின் எந்த பகுதியையும் தாக்கும் உலகின் மிகப் பெரிய ஏவுகணை சோதனை: அடங்காத வடகொரியா

சியோல்: இருந்த இடத்திலிருந்தே அமெரிக்கா உட்பட உலகின் எந்தவொரு நாட்டையும் துவம்சம் செய்யக்கூடிய உலகின் மிகப்பெரிய ஏவுகணையை வடகொரியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அமெரிக்க அதிபராக டிரம்ப் இருந்தபோது மேற்கொண்ட அமைதி முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில், புதிய அதிபராக பைடன் பதவியேற்ற பிறகு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மீண்டும் தனது அணு ஆயுத சோதனையை முடுக்கிவிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக பல்வேறு ஏவுகணைகளை சோதனை செய்த வடகொரியா, நேற்று முன்தினம் ஹவாசாங்க்-17 என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிபயங்கரமான ஏவுகணையை சோதனை செய்துள்ளது. இது 82 அடி நீளம் கொண்ட உலகின் மிகப் பெரிய ஏவுகணையாக கருதப்படுகிறது. கடந்த 2020ம் ஆண்டு வடகொரியாவின் ராணுவ அணிவகுப்பில் இந்த ஏவுகணையை வடகொரியா உலகிற்கு காட்டியது. தற்போது தலைநகர் பியாங்யங்க்கின் விமான நிலையத்தில் இருந்து ஹவாசாங்க்-17ன் முழுமையான சோதனையை நடத்தி உள்ளது.

அண்டை நாடுகளின் கடல் பகுதியில் விழுவதை தவிர்க்க இந்த ஏவுகணை வானை நோக்கி ஏவப்பட்டது. 67 நிமிடங்கள் பறந்த இந்த ஏவுகணை 6,248 கிமீ உயரத்திற்கு சென்று, அங்கிருந்து 1,090 கிமீ பயணம் செய்து, வடகொரியா-ஜப்பான் இடையேயான கடல் பகுதியில் விழுந்ததாக வடகொரியா ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஏற்கனவே, ஹவாசாங்க்-15 ஏவுகணையை வடகொரியா 2017ல் சோதித்துள்ளது. அந்த ஏவுகணை அமெரிக்காவின் ஒரு சில நகரங்கள் வரை சென்று தாக்கக் கூடியது என கூறப்பட்ட நிலையில், ஹவாசாங்க்-17 அமெரிக்காவின் எந்த பகுதியையும் தாக்கும் வல்லமையை பெற்றுள்ளது.

மேலும் உலகின் மற்ற நாடுகளையும் துவம்சம் செய்யக் கூடியது என கூறப்பட்டுள்ளது. சாதாரணமாக சமதளத்தில் இந்த ஏவுகணையை ஏவினால் 15,000 கிமீ வரை சென்று தாக்கும். எனவே, கிம் ஜாங் நினைத்தால் உட்கார்ந்த இடத்திலிருந்தே உலகின் எந்த ஒரு நாட்டையும் நாசம் செய்து விடலாம். இதனால் வடகொரியா 2017ல் அணு ஆயுத சோதனையில் தீவிரமாக ஈடுபட்டிருந்த காலகட்டத்திற்கு மீண்டும் திரும்பி இருப்பதாக தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.

Tags : United States ,North Korea , The world's largest missile test that can hit any part of the United States: North Korea unrestrained
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்