×

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பான ஆவணங்களை வழங்கக் கோரிய வழக்கில் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் பதில் அளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. ஒன்றியத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம், அந்நிய முதலீடாக ரூ.305 கோடி பெற அனுமதி வழங்கப்பட்டதில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

இது தொடர்பாக, அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் சிபிஐ, அமலாக்கத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சில ஆவணங்களின் நகலை ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்திற்கு வழங்க கடந்த 2020 ஜனவரி 25ம் தேதி விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மேல்முறையீடு செய்துள்ளது.

இது நீதிபதி யோகேஷ் கண்ணா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத் துறையின் மனுவுக்கு பதில் அளிக்கும்படி ப.சிதம்பரமும், கார்த்தி சிதம்பரமும் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கை ஏப்ரல் 20ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அதுவரை விசாரணை நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்படாது என்றும் அறிவித்தார். இதே போல், ஆவணங்களை ஆய்வு செய்ய அனுமதிக்கும் விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து சிபிஐ ஏற்கனவே தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.


Tags : INX ,Delhi High Court ,P. Chidambaram ,Karthi Chidambaram , INX Media case: Delhi High Court issues notice to P. Chidambaram, Karthi Chidambaram
× RELATED பரம்பரை சொத்துவரிக்கு எதிரான...