×

தஞ்சை மாவட்டத்தில் கோடை சாகுபடி தீவிரம்

தஞ்சை: தஞ்சை மாவட்டத்தில் கோடை நெல் சாகுபடி பணிகளில் பாய் நாற்றங்கால் தயாரிப்பு மற்றும் உழவுப்பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் பாசனத்துக்காக மேட்டூர் அணை ஜூன் மாதம் 12ம் தேதி திறக்கப்படுவது வழக்கம். அதன்படி குறிப்பிட்ட தேதியில் அணையில் இருந்து தண்ணீர் திறந்தால் குறுவை, சம்பா சாகுபடி பரப்பளவு அதிகரித்து காணப்படும். அதன்படி கடந்த ஆண்டு குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறக்கப்பட்டதால் குறுவை மற்றும் சம்பா தாளடி சாகுபடி நிர்ணயிக்கப்பட்ட பரப்பளவை விட அதிக அளவில் நடைபெற்றது.

இதே போல் நெல் கொள்முதலும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டும் டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை வரும் ஜூன் மாதம் 12ம் தேதி திறப்பதற்கான வாய்ப்பு உள்ளது. காரணம் தற்போது வரை 100 அடிக்கு மேல் தண்ணீர் உள்ளது. இதனால் குறுவை சாகுபடி இந்த ஆண்டும் அதிக அளவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் தற்போது முன்பட்ட குறுவை எனப்படும் கோடை நெல் சாகுபடிக்கான ஆயத்த பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

தஞ்சை மாவட்டத்தில் கோடை நெல் சாகுபடி 10 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக நடைபெறும். தற்போது பம்புசெட் மோட்டார் வைத்திருக்கும் விவசாயிகள் அதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்காக பல்வேறு இடங்களில் பாய் நாற்றங்கால் தயாரிக்கும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நாற்றுகள் வளர்ந்த இடங்களில் நடவுப்பணிகளை மேற்கொள்வதற்கான ஆயத்த பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்காக வயிலில் எரு அடிப்பது, வயலை உழுது தயார் செய்வது போன்ற பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு குறுவை பாசனத்துக்கு ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். இதை நம்பி முன்பட்ட குறுவை பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.

பம்புசெட் மூலம் நடவுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், ஆறுகளில் தண்ணீர் திறக்கப்படும் போது தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாத நிலை வரும். பல இடங்களில் குறுவைக்கான நாற்றங்கால் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. எனவே குறுவை சாகுபடிக்கு தேவையான நெல் விதைகள் மற்றும் உரம் போன்ற இடுபொருட்களை தட்டுப்பாடு இல்லாமல் வாங்கி இருப்பு வைத்து வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.



Tags : Tamjai district , Tanjore, summer cultivation, intensity
× RELATED தஞ்சை மாவட்டத்தில் வயல்களில் உரம்,...