ஜோலார்பேட்டை அருகே இன்று ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்: பொதுமக்கள் அச்சம்

ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை அருகே ஏரியில் ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. இந்த தண்ணீரில் விஷம் கலந்திருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த அம்மையப்பன் நகர் ஊராட்சியில் சில்கூர்  ஏரி உள்ளது. பல ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு பெய்த கனமழையால் இந்த ஏரி நிரம்பி வழிந்தது. இதனால் இந்த ஏரியில் மீன் குஞ்சுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. ஏரியில் வளர்ந்த மீன்கள்  ஏலம் எடுக்க நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று காலை சில்கூர் ஏரியில்  சுமார் 200 கிலோவுக்கும் மேற்பட்ட மீன்கள் செத்து மிதந்தது. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த ஊராட்சி மன்ற தலைவர் ஜமுனா இளவரசன் மற்றும் கிராம மக்கள் வந்து பார்த்தனர். இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ஜோலார்பேட்டை போலீசார் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதற்கு சமூக விரோதிகளின் செயலா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏரியில் மர்மமான முறையில் மீன்கள் இறந்து கிடப்பதால் ஏரி தண்ணீரில் யாராவது விஷம் கலந்தார்களா என்ற அச்சம் பொதுமக்களிடயே ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: