×

சினிமா பிரபலம் என்பதால் விலக்கு அளிக்க முடியாது: நடிகை கங்கனா வழக்கில் நீதிமன்றம் அதிரடி

மும்பை: சினிமா பிரபலம் என்பதால் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து கங்கனாவுக்கு விலக்கு அளிக்க முடியாது என்று அந்தேரி நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சினிமா பிரபல பாடலாசிரியர் ஜாவேத் அக்தர், பாலிவுட் நடிகை கங்கனா மீது கிரிமினல் அவதூறு புகார் ஒன்றை அந்தேரி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கு பெருநகர மாஜிஸ்திரேட் ஆர்.ஆர்.கான் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கங்கனா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘இந்தி திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கங்கனா உள்ளார். படப்பிடிப்பிற்காக அவர் அடிக்கடி வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களுக்கு சென்றுவருவார். தொடர்ந்து அவர் பயணம் செல்வதால், அவரால் வழக்கின் விசாரணைக்கு ஆஜராவதில் தாமதங்கள் ஏற்படுகிறது.

எனவே, அவரை நிரந்தரமாக ஆஜராகாமல் இருக்க அனுமதிக்க வேண்டும்’ என்றார். அப்போது மாஜிஸ்திரேட் ஆர்.ஆர்.கான் பிறப்பித்த உத்தரவில், ‘வழக்கு விசாரணைக்காக அவரை (கங்கனா) நிரந்தரமாக ஆஜராகுவதில் இருந்து விலக்கு அளிக்க முடியாது. அது தொடர்பான மனுவை நிராகரிக்கப்படுகிறது. விசாரணைக்கு நிரந்தரமாக ஆஜராகாமல் இருக்க கங்கனாவுக்கு அனுமதி அளித்தால், மூத்த குடிமகனாக இருக்கும் மனுதாரர் அக்தருக்கும் வழங்க வேண்டியது இருக்கும். இதனால் வழக்கின் விசாரணை பாதிக்கப்படும். அவர் பிரபலமாக இருக்கலாம்; ஆனால் நீதிமன்றத்தை பொருத்தமட்டில் அவர் மீது வழக்கு உள்ளது. மேலும் அவர் குற்றம் சாட்டப்பட்டவர் என்பதை மறுக்க முடியாது. எனவே, அவர் (கங்கனா) சட்டப்பூர்வ நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.


Tags : Kangana , Cinema celebrity is no exception: Court action in actress Kangana case
× RELATED நடிகை கங்கனாவுக்கு எதிராக முன்னாள்...