×

வானூர் அருகே சாய்பாபா சிலையை உடைத்த கோயில் பூசாரி அதிரடி கைது பரபரப்பு வாக்குமூலம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா இரும்பை கிராமத்தில் திண்டிவனம் - புதுச்சேரி புறவழிச்சாலை அருகே சாய்பாபா கோயில் கட்டப்பட்டு வருகிறது. கோயிலில் வைப்பதற்காக சாய்பாபா சிலை ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து கொண்டு வரப்பட்டது. கோயில் வேலை செய்யும் பகுதியில் உள்ள கொட்டகையில் வைக்கப்பட்ட சிலையின் தலையில் கடப்பாரையால் உடைத்து சேதப்படுத்தப்பட்டிருந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் அந்த கோயிலில் பூசாரியாக வேலை பார்த்து வந்த புதுச்சேரியை சேர்ந்த மோகன் (எ) சாய்குமார்(45) என்பவர்தான் சிலையை உடைத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் கூறியதாவது: சாய்பாபா கோயில் கட்டப்பட்டு வரும் இடத்தின் அருகில் பழைய கொட்டகையில் சிறிய அளவிலான சாய்பாபா சிலை வைத்து அதில் வழிபாடு செய்து வந்தோம். புதிய இடத்தில் சிலை வைக்க வெளியிலிருந்து சிலை எடுத்து வந்து பாதுகாப்பாக வைத்திருந்தோம். ஆனால் என்னுடைய கனவில் சாய்பாபா தோன்றி பழைய சிலையைதான் வைக்க வேண்டும் அதில்தான் நான் உள்ளேன் என்று கூறினார்.

அதனை பலமுறை நான் கோயில் நிர்வாகியிடம் தெரிவித்தேன். அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. மீண்டும் எனது கனவில் சாய்பாபா தோன்றி அதையே தெரிவித்ததால் புதிய சிலையை சேதப்படுத்தினேன் என்று வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Sai Baba ,Vanur , Sai Baba idol, broken, priest, arrested
× RELATED சாய்பாபா வழிபாடு