5 மாநில தோல்வி எதிரொலி குஜராத் தேர்தலுக்கு தயாராகும் காங்.: பிரசாந்த் கிஷோரை களம் இறக்க முடிவு?

புதுடெல்லி: குஜராத் தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி தயாராகும் நிலையில், பிரசாந்த் கிஷோரை களம் இறக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் பேரவை தேர்தல் முடிந்த நிலையில், இந்த ஆண்டு இறுதியில் குஜராத், இமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. மேற்கண்ட 5 மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்த நிலையில், குஜராத், இமாச்சல் பிரதேச தேர்தலுக்கு வியூகங்களை வகுக்கும் வேலையில் காங்கிரஸ் கட்சி இறங்கியுள்ளது. குறிப்பாக குஜராத் தேர்தலில் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை தொடர்பு கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு பிரசாந்த் கிஷோருக்கும், காங்கிரசுக்கும் இடையே பிளவு ஏற்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது ராகுல் காந்தியை பிரசாந்த் கிஷோர் அணுகியதால் மீண்டும் ஊகங்கள் அதிகரித்துள்ளன. பிரசாந்த் கிஷோர் மற்றும் காங்கிரஸுக்கு இடையே பல மாதங்களாக பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும், இரு தரப்புக்கும் இடையே சிறந்த ஒருங்கிணைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் மூத்த தலைவர்கள் கூறினர். இதற்கிடையே குஜராத் காங்கிரஸ் தலைவர்களை ராகுல் காந்தி சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது பிரசாந்த் கிஷோர் விவகாரம் குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது. ராகுல் காந்தியுடனான சந்திப்பின் போது, பிரசாந்த் கிஷோரை குஜராத் தேர்தல் களத்தில் ஈடுபடுத்த வேண்டும் என்று அம்மாநில தலைவர்கள் சிலர் கோரிக்கை விடுத்ததாகவும், ஆனால் இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவித்தன.

Related Stories: