புத்தேரியில் ஆக்கிரமித்து பயிர்செய்த ரூ.2 கோடி மதிப்புடைய 5 ஏக்கர் அரசு நிலம் மீட்பு: காஞ்சி கலெக்டர் அதிரடி

காஞ்சிபுரம்: புத்தேரியில் ஆக்கிரமித்து பயிர்செய்த ₹2 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை வருவாய் துறையினர் அதிரடியாக மீட்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆறு, ஏரி, குளம், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை மீட்கும்படி  மாவட்ட வருவாய் துறையினருக்கு காஞ்சிபுரம் கலெக்டர்  ஆர்த்தி உத்தரவிட்டுள்ளார். அதன்படி நீர்நிலை ஆக்கிரமிப்புகளை மீட்கும் நடவடிக்கையில் வருவாய் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காஞ்சிபுரம் தாலுகாவுக்குட்பட்ட புத்தேரியில் வேகவதி ஆற்றின் கரையோர  பகுதி நிலங்களை பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து பயிர்செய்து செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து  ஆக்கிரமிப்பு நிலங்களை காலி செய்யும்படி சம்பந்தப்பட்டவர்களுக்கு வருவாய் துறையினரும், பொதுப்பணி துறையினரும் நோட்டீஸ் வழங்கினர். ஆனால் யாரும் காலி செய்யவில்லை.

இந்நிலையில் ஆக்கிரமிப்பு நிலங்களில் நெல் அறுவடை நடந்து முடிந்த நிலையில், காஞ்சிபுரம் தாசில்தார் பிரகாஷ், பொதுப்பணித்துறை பொறியாளர் மார்கண்டன் தலைமையில்  வருவாய் துறை மற்றும் பொதுப்பணி துறை அதிகாரிகள், வேகவதி ஆற்றங்கரை பகுதிக்கு நேற்று சென்றனர். நிலங்களை  அளவீடு செய்து பொக்லைன் இயந்திரம் மூலம் 5 ஏக்கர் நிலத்தை மீட்டு அதில், ‘அத்துமீறி நுழைந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என அறிவிப்பு பலகை வைத்தனர். மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ₹2 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.  பல ஆண்டுகளாக பயிர் செய்து வந்த நிலம் மீட்கப்பட்டதால்  விவசாயிகள் அதிருப்தியடைந்தனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: