×

கூடுவாஞ்சேரி அருகே சொத்து தகராறில் தந்தையை கொடூரமாக கொன்ற மகன் உள்பட 5 பேர் கைது: கார், பைக், 2 கத்தி பறிமுதல்

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அருகே சொத்துக்காக தந்தையை கொடூரமாக கொன்ற மகன் உள்பட 5 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர். கூடுவாஞ்சேரி அருகே பெருமாட்டுநல்லூர் அடுத்த கன்னிவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் உமாபதி (65). எலக்ட்ரீசியன். இவரது மகள் லோகேஸ்வரி (37), மகன் சரவணன் (35). கடந்த 21ம் தேதி காலை உமாபதி பைக்கில் வேலைக்கு சென்றார். கன்னிவாக்கத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனி அருகே சென்றபோது, பைக்கில் வந்த 2 பேர் மற்றும் காரில் வந்த 3 பேர் வழிமடக்கி உமாபதியை சரமாரி வெட்டி கொலை செய்தனர். தகவலறிந்து கூடுவாஞ்சேரி போலீசார் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அனுப்பினர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரவணன் உள்ளிட்ட 5 பேரை தேடினர்.

மேலும் கூடுவாஞ்சேரி சரக உதவி காவல் ஆணையர் சிங்காரவேலு தலைமையிலான தனிப்படையினர், கொலையாளிகளை தேடினர். நேற்றிரவு வேளச்சேரியில் ஒரு கடையில் 5 பேர் கும்பல் பதுங்கியிருப்பது தெரியவந்தது. தனிப்படையினர் விரைந்து சென்று 5 பேரை மடக்கி பிடித்து, கூடுவாஞ்சேரி காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். இதில் தெரியவந்த திடுக் தகவல்கள் வருமாறு: கொலையான உமாபதியின் மனைவி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். உமாபதியின் மகள் லோகேஸ்வரிக்கு 2 குழந்தைள், சரவணனுக்கு 2 குழந்தைகள். கடந்தாண்டு லோகேஸ்வரியின் கணவர் இறந்து விட்டதால் 2வது திருமணம் செய்தார்.

இந்நிலையில், உமாபதிக்கு கன்னிவாக்கம், காயரம்பேடு ஆகிய பகுதிகளில் 2 வீடுகள் உள்ளன. அதில் ஒரு வீட்டை சரவணனுக்கும், மற்றொரு வீட்டை லோகேஸ்வரியின் மகனுக்கும் உமாபதி உயில் எழுதி வைத்துள்ளார். இது சரவணனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. 2 வீட்டையும் எழுதி வைக்கும்படி சரவணன் தகராறு செய்துள்ளார். உமாபதி சம்மதிக்கவில்லை. ஆத்திரமடைந்த சரவணன், கடந்த சில மாதங்களுக்கு முன் லோகேஸ்வரியின் மகனை கடத்தினார். மேலும் 2 வீட்டையும் சரவணனின் மனைவி உமாமகேஸ்வரி பெயரில் பத்திரப்பதிவு செய்து தரும்படியும் மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன உமாபதி, லோகேஸ்வரிக்கு கொடுத்த வீட்டையும் சரவணனின் மனைவி பெயரில் எழுதி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக கூடுவாஞ்சேரி போலீசில் சரவணன்மீது வழக்கு உள்ளது. மேலும், இப்பிரச்னை குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் உமாபதி வழக்கு தொடர்ந்துள்ளார். கடந்த 2 வாரங்களுக்கு முன் தாம்பரம் ஆர்டிஓ அலுவலகத்திலும் விசாரணை நடந்தது.

இந்நிலையில், உமாபதி தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 21ம் தேதி விசாரணைக்கு வந்தது. இதில், உமாபதிக்கு சாதகமாக தீர்ப்பு வந்துவிடுமோ என்ற பயத்தில், அன்றைய தினமே ஒரு கூலிப்படையை வைத்து உமாபதியை சரவணன் கொன்றுள்ளார். இவ்வாறு விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து சரவணன் (36), வேளச்சேரியை சேர்ந்த செல்வம் (எ) செல்லா (37), விக்னேஷ் (32), உதயகுமார் (38), சேகர் (40) ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கொலைக்கு பயன்படுத்திய கார், பைக், 2 கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

Tags : Guduvancheri , Guduvancheri, 5 arrested in property dispute
× RELATED கீரப்பாக்கத்தில் குறைந்த மின்னழுத்த...