×

கல்வராயன்மலையில் மாணவர்களுக்கு மதிய உணவு கிடைக்காத அவலம்-கலெக்டர் நடவடிக்கை தேவை

சின்னசேலம் : கல்வராயன்மலையில் சேராப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்டது குரும்பாலூர் கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 30 மாணவர்களை கொண்ட ஓராசிரியர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இந்த பள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி என்பதால் பழங்குடியின நலத்துறையில் வராது.
அதனால் இந்த பள்ளி உண்டு உறைவிட பள்ளியாக இயங்க முடியாது.

மேலும் இப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்தின் கீழ் உணவு வழங்குவதில்லை. இந்த மாணவர்களுக்கு உணவு கிடைத்திட கடந்த 10 ஆண்டுகளாக கல்வி அதிகாரிகளும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மாணவர்கள் வருகை குறையும் நிலையில் உள்ளது. அரசாங்கமே மதிய உணவு வழங்கினால் இன்னும் கூடுதல் மாணவர்கள் வர வாய்ப்பு உள்ளது.

இந்த பள்ளிக்கு குரும்பாலூர், தடுத்தான் பாளையம், ஏரிக்கரை ஆகிய பகுதிகளில் இருந்து மாணவர்கள் வருகின்றனர். இந்த மாணவர்கள் மதியம் சாப்பிட வீட்டுக்கு சென்றால் மீண்டும் பள்ளிக்கு திரும்புவது கடினம். இதை உணர்ந்த பள்ளி தலைமை ஆசிரியர் கடந்த 3 ஆண்டுகளாகவே தனது சொந்த செலவில் மதிய உணவு வழங்கி வருகிறார். இதேபோல ஆனைமடுவு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுவதில்லை.

ஆனால் இந்த ஊரில் மிகப்பெரிய சத்துணவு கட்டிடம் மட்டும் காட்சிப்பொருளாக உள்ளது. ஆகையால் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் இந்த பள்ளியை ஆய்வு செய்து மாணவர்களுக்கு அரசு சார்பில் மதிய உணவு கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் கல்வராயன்மலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளிகளை மட்டும் அத்தியாவசியமாக கருதி பழங்குடியின உண்டு உறைவிட பள்ளியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


Tags : Kalwarayanmalai , Chinnasalem: The village of Kurumbalur is part of the Kalwarayanmalai panchayat. This village has about 30 students
× RELATED கல்வராயன்மலையில் சாராய ரெய்டு-கள்ளத்துப்பாக்கி, சாராயம் பறிமுதல்