வேலூர் சதுப்பேரி கால்வாய் ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் இடிக்கும் பணி திடீர் நிறுத்தம்-2 நாள் அவகாசம் கேட்டதால் அதிகாரிகள் நடவடிக்கை

வேலூர் :  வேலூர் மாவட்டத்தில் வேலூர் நகரின் பிரதான நிலத்தடி நீராதாரமாக விளங்கும் சதுப்பேரியின் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் வருவாய்த்துறையினர் மற்றும் பொதுப்பணித்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதில் சதுப்பேரியில் இருந்து உபரிநீர் வெளியேறும் 110 அடி அகலம் கொண்ட கால்வாய் 25 அடி கால்வாயாக சுருங்கியிருந்தது தெரியவந்தது. 150க்கும் மேற்பட்டவர்கள் இக்கால்வாயை ஆக்கிரமித்து குடியிருப்புகளையும், கூடுதல் கட்டிடங்களையும் கட்டியுள்ளனர்.

இதில் 30 பேர் முழுமையாக வீடு கட்டி வசித்து வருகின்றனர். இதையடுத்து சதுப்பேரியில் இருந்து உபரிநீர் வெளியேறும் 150 ஆக்கிரமிப்பாளர்களுக்கு கடந்த 21 நாட்களுக்கு முன்பு முன்னெச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர். ேநாட்டீஸ் வழங்கியும் ஆக்கிரமிப்புகள் அகற்றாததால் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவின்ேபரில், வேலூர் தாசில்தார் செந்தில் தலைமையிலான வருவாய்த்துறையினர் மற்றும் பொதுப்பணித்துறையினர் நேற்றுமுன்தினம் காலை அதிரடியாக ஜேசிபி இயந்திரத்துடன் சென்று ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

10க்கும் மேற்பட்ட வீடுகளின் சுற்றுச்சுவர்கள் இடிக்கப்பட்டது. தொடர்ந்து 2வது நாளாக நேற்று காலை வீடுகள் இடிக்கும் பணி தொடங்கியது. இரு வீடுகளை இடித்து தள்ளினர். ஆனால் அப்பகுதி பொதுமக்கள் வீடுகள் காலி செய்ய தங்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்று ஆர்டிஓ பூங்கொடி, தாசில்தார் செந்தில் ஆகியோரிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அவர்களுக்கு அதிகாரிகள் 2 நாட்கள் கால அவகாசம் வழங்கினார்.

தொடர்ந்து அவர்களுக்கு மாற்று இடம் வழங்குவதற்காக சேண்பாக்கம் பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தை ஆர்டிஓ பூங்கொடி, தாசில்தார் செந்தில் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். விரைவில் அவர்களுக்கு மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: