×

ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா தேசிய பசுமை தீர்ப்பாய உறுப்பினராக நியமனம்

சென்னை: கடந்த மாதம் ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா தேசிய பசுமை தீர்ப்பாய உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினராக 4 ஆண்டுகள் நியமிக்கப்படுகிறார். இவர், சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக கடந்த 2013ல் பதவியேற்றார். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் 1960ம் ஆண்டு பிறந்தார். 1985ல் சென்னை சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராக பதிவு செய்தார்.

28 ஆண்டுகள் வழக்கறிஞராக சிவில் வழக்குகளில் ஆஜராகி வந்தார். அவரது தந்தை ஐ.ஏ.எஸ். அதிகாரி. கல்வி நிறுவன பணியாளர்ளுக்கு இ.எஸ்.இ. பொருந்தும் என மூன்று பெண் நீதிபதிகள் அடங்கிய முழு அமர்வுக்கு தலைமை வகித்தவர் இவர். சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரத்தில் திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸை ரத்து செய்து தீர்ப்பளித்தவர். சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்துவது தொடர்பான வழக்கில் நடிகர் விஜய்க்கு எதிரான கருத்துகளை நீக்கியது, நடிகர் சங்க தேர்தல் செல்லும் என்று தீர்ப்பளித்தது நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா அளித்த தீர்ப்புகளில் குறிப்பிடத்தக்கது. கடந்த பிப்ரவரி 27ம் தேதி ஓய்வு பெற்றார். இந்த நிலையில் அவர் தற்போது தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினராக பதவியேற்க உள்ளார்.

Tags : ICC ,Judge ,Pushpa Satyanarayana ,National Green Tribunal , Retired ICC Judge Pushpa Satyanarayana has been appointed as a member of the National Green Tribunal
× RELATED மதுரை கோயில் செங்கோல் வழக்கு: தனி...