×

2021-22ம் ஆண்டிற்கான துணை பட்ஜெட் ரூ.10,567 கோடி நிதி ஒதுக்கீடு: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் 2021-22ம் ஆண்டிற்கான துணை நிதிநிலை பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அப்போது ஸ்ரீ10,567 கோடி நிதி ஒதுக்குவதற்கான அறிவிப்புகளை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். தமிழக சட்டப்பேரவையில் 2021-22ம் ஆண்டிற்கான துணை நிதிநிலை அறிக்கையை நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து பேசியதாவது: 2021-22ம் ஆண்டிற்கான இறுதி துணை மதிப்பீடுகளை இம்மாமன்றத்தின் முன் சமர்ப்பிக்கிறேன். துணை மானியக் கோரிக்கைகளை விளக்கிக் கூறும் விரிவான அறிக்கையினை இம்மாமன்றத்தின் முன் வைக்கிறேன். இந்த அவையில் வைக்கப்பட்டுள்ள இந்த துணை மதிப்பீடுகள் மொத்தம் 10,567.01 கோடி ரூபாய் நிதி ஒதுக்கத்திற்கு வகை செய்கின்றன. இதில், 8,908.29  கோடி ரூபாய் வருவாய் கணக்கிலும் 1,658.72 கோடி ரூபாய் மூலதனம் மற்றும் கடன் கணக்கிலும் அடங்கும்.

* 2022ம் ஆண்டு ஜனவரி 7ம் நாளன்று 2021-22ம் ஆண்டிற்கான முதல் துணை மதிப்பீடுகள் சட்டமன்ற பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் “புதுப்பணிகள்” மற்றும் “புது துணைப்பணிகள்” குறித்து ஒப்பளிப்பு செய்யப்பட்ட செலவினங்களுக்கு சட்டமன்றப் பேரவையின் ஒப்புதலை பெறுவது இத்துணை மதிப்பீடுகளின் முக்கிய நோக்கமாகும்.
* துணை மதிப்பீடுகளில் கூடுதல் நிதியொதுக்கம் தேவைப்படும் சில முக்கிய இனங்கள் பின்வருமாறு:
* “கூட்டுறவு (கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை)”, நகைக் கடன் தள்ளுபடிக்காக 1,215.58 கோடி ரூபாய்.
* ‘‘ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை’’, பதினைந்தாவது ஒன்றிய நிதிக்குழுவின் பரிந்துரைகளின்படி, கிராம ஊராட்சிகளுக்கு அடிப்படை மானியத்திற்காகவும், செயல்திறன் மானியத்திற்காகவும் 1,140.31 கோடி ரூபாய். மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்திற்காக 948.58 கோடி ரூபாய்.
* போக்குவரத்துத் துறை மகளிருக்கு இலவசப் பேருந்துப் பயணத்திற்காக 546.83 கோடி ரூபாய்.
* ‘‘இயற்கைச் சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு’’, கோவிட் பெருந்தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்தவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கான உதவித் தொகை உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காகவும் 333.55 கோடி ரூபாய்.
* “நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை”, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களை நடத்துவதற்கு 212.92 கோடி ரூபாய். 2021-22ம் ஆண்டிற்கான இறுதி துணை மதிப்பீடுகளை இம்மாமன்றம் ஏற்று இசைவளிக்க வேண்டுகிறேன் என்றார். இதை தொடர்ந்து துணை நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

Tags : Minister ,Palanivel Thiagarajan , 10,567 crore supplementary budget for 2021-22: Palanivel Thiagarajan
× RELATED பெரிய முதலாளிகளுக்கு சலுகை...