ஆளும் கட்சி பிரமுகரின் மகள் முதல் மதிப்பெண் பெற பள்ளியின் முதல் மாணவிக்கு டிசி வழங்கியதால் தற்கொலை: ஆந்திராவில் அக்கிரமம்

திருமலை: ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டம், பலமனேரில்  பிரம்மர்ஷி பள்ளியில் மாணவி மிஸ்பா 10ம் வகுப்பு படித்து வந்தார். இவர் படிப்பில் முதல் மாணவியாக இருந்தார். ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  சுனில்  மகள் பூஜிதா. இவர் அனைத்து தேர்விலும் 2ம் இடத்திற்கு சென்றார். இதனால்,  மிஸ்பாவை பள்ளியை விட்டு நீக்க முடிவு செய்து தலைமை ஆசிரியர் ரமேஷ் மூலம் டிசி வழங்கி உள்ளார். இதனால், மனமுடைந்த மிஸ்பா, உருக்கமான கடிதம் எழுதி வைத்து நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்திற்கு பள்ளி நிர்வாகமே பொறுப்பு எனக் கூறி மிஸ்பாவின் பெற்றோர்கள் உறவினர்கள், மாணவர் சங்கத்தினர் பள்ளியை நேற்று முற்றுகையிட்டனர். மிஸ்பா தனது தந்தைக்கு ஆங்கிலத்தில் எழுதியுள்ள கடிதத்தில், ‘அப்பா மன்னிக்கவும். என்னால் உங்களுக்கு பல பிரச்னைகள். எனது நெருங்கிய தோழியே  எனது மரணத்திற்கு காரணம்.  அனைத்திற்கும் நீ தான்  காரணம் பூஜிதா.... என்னை மன்னிக்கவும் அப்பா. உன்னை விட்டு போக முடியாது. ஆனால்,  இன்று உன்னை  விட்டு மீண்டும் வர முடியாத இடத்திற்கு செல்கிறேன். என் மரணத்திற்கு ஒரே காரணம் பூஜிதா, பூஜிதா, பூஜிதா. இப்படிக்கு உங்கள் மகள் மிஸ்பா. விடைபெறுகிறேன்,’ என்று கூறியுள்ளார்.

Related Stories: