×

ஆப்கானில் 10 ஆண்டில் 15 ஆயிரம் பேரை இழந்த நிலையில் உக்ரைனில் ஒரே மாதத்தில் 15,000 ரஷ்ய வீரர்கள் பலி: ரசாயன, அணு ஆயுதங்கள் பயன்படுத்த வாய்ப்பு

கீவ்: ஆப்கானிஸ்தானில் 10 ஆண்டுகள் நடந்த போரில் 15 ஆயிரம் வீரர்களை இழந்த ரஷ்யா, உக்ரைன் போரில் ஒரே மாதத்தில் 15 ஆயிரம் வீரர்களை பறி கொடுத்துள்ளது. இந்த சூழலில், உக்ரைனின் கடும் பதிலடியால் ரசாயன அல்லது அணு ஆயுதங்களைப் பயன்படுத்த ரஷ்யா திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நேற்று 31வது நாளாக தொடர்ந்தது. உக்ரைனின் தலைநகர் கீவ், 2வது பெரிய நகரம் கார்கிவ், துறைமுகம் நகரம் மரியுபோல் உள்ளிட்ட முக்கிய நகரங்களை சுற்றிவளைத்து ரஷ்ய படைகள் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றன. ஆனால், உக்ரைன் படைகளின் பதிலடியால் ரஷ்யா தொடர்ந்து முன்னேற முடியாமலும், முக்கிய நகரங்களையும் கைப்பற்ற முடியாமல் திணறி வருகிறது. கெர்சன் பகுதியை மட்டுமே ரஷ்ய முழுமையாக கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது. மற்ற இடங்களில் கடும் சண்டை நடந்து வருகிறது. போர் நிறுத்தம் தொடர்பாக பெலாரசில் உக்ரைன்-ரஷ்ய இடையே நடத்தப்பட்டு பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தது. இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் மத்தியஸ்தம் பேச தயார் என அறிவித்துள்ளன. அதே நேரம், ரஷ்ய அதிபர் புடினுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு தயார் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ஆனால் புடினோ, ‘நேட்டோவில் இணையும் திட்டத்தை கைவிட்டு, ஆயுதங்களை கீழே போட்டு சரணடைந்தால் போர் நிறுத்தத்திற்கு தயார்’ என்று கூறி வருகிறார்.

நேட்டோவில் இணையும் திட்டத்தை கைவிடுகிறேன் என்று ஜெலன்ஸ்கி கூறினாலும், நேட்டோ நாடுகளின் உதவியை தொடர்ந்து பெற்று வருகிறார். குறிப்பாக, நேட்டோ நாடுகளிடம் இருந்து ஏராளமான ஆயுத உதவிகள் உக்ரைனுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஆத்திரமடைந்துள்ள புடின், உக்ரைன் மீது தாக்குதலை தீவிரப்படுத்தப்படுத்தி உள்ளார். இந்த போரில் இருதரப்பிலும் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள், வீரர்கள் பலியாகியும், படுகாயமடைந்தும் உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக நடந்த போரில் 7,000 முதல் 15,000 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக நேட்டோ தெரிவித்துள்ளது. 1979ம் ஆண்டு முதல் 1989ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் ஆப்கானில் சோவியத் யூனியன் நடத்திய போரில் சுமார் 15,000 வீரர்களை இழந்தது. ஆனால், உக்ரைனுடனான ஒரு மாத போரிலேயே 15,000 வீரர்களை ரஷ்யா பறிகொடுத்து உள்ளதாக கூறப்படுகிறது.

ரஷ்யாவை தனிமைப்படுத்தும் வகையில், ஜி20 நாடுகளின் குழுவில் இருந்து வெளியேற்றலாமா என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ்சில் நடக்கும் நேட்டோ, ஜி7 மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளின் தலைவர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 4 நாள் சுற்றுப்பயணமாக நேற்று பிரசல்ஸ் வந்தார். நேற்று மாலை நேட்ேடா தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இதில், ரஷ்யா மீது புதிய பொருளாதார தடைகளை விதிப்பது, உக்ரைனுக்கு உதவிகளை அதிகரிப்பது போன்றவை குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது.  இந்நிலையில், உக்ரைன் ராணுவத்தின் கடும் பதிலடியால் தவிக்கும் ரஷ்யா, ரசாயன அல்லது அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடும் என்ற அச்சம் உள்ளதாக பைடன் நேற்றும் அச்சம் தெரிவித்தார். இந்த சூழலில், புடின் மீது அழுத்தத்தை அதிகரிக்க மேற்கத்திய நாடுகளும் பைடனும் ஒரு பாதையை வகுக்க ஒன்று கூடி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரஷ்ய தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களிக்கவில்லை
ஐநா.வில் ரஷ்யாவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட பல தீர்மானங்கள் மீதான வாக்கெடுப்பில், ரஷ்யாவுக்கு ஆதரவாக இந்தியா பங்கேற்காமல் நடுநிலை வகித்து வருகிறது. இந்நிலையில், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா நேற்று முன்தினம் கொண்டு வந்த தீர்மானத்தில், ‘பாதிக்கப்படக்கூடிய சூழலில் உள்ள பொதுமக்கள், மனிதநேய பணியாளர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும். பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்க வேண்டும்,’ என கூறப்பட்டது. ஆனால், உக்ரைன் மீதான தாக்குதல் குறித்து தீர்மானத்தில் எதுவும் கூறப்படவில்லை. இந்த தீர்மானத்தை ஆதரித்து 9 நாடுகள் வாக்களித்தால் அது நிறைவேற்றப்படும். ஆனால், இந்தியா உட்பட 13 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இதனால், தீர்மானம் தோற்றது. தீர்மானத்துக்கு ஆதரவாக சிரியா, வடகொரியா, பெலாரஸ், சீனா, ரஷ்யா மட்டுமே வாக்களித்தன.

எங்களுக்கு ஆதரவாக வீதிக்கு வாருங்கள்...-அதிபர் உருக்கம்
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ‘உலகெங்கிலும் உள்ள மக்கள் ஒன்று கூடி உக்ரைனுக்கு ஆதரவை காட்ட வேண்டும். பூமியில் உள்ள ஒவ்வொரு சுதந்திரமான நபரின் இதயத்தை இந்த போர் உடைத்துள்ளது. உங்கள் சதுக்கங்களுக்கு, உங்கள் தெருக்களுக்கு வாருங்கள்.  உங்களைப் பார்க்கவும் கேட்கவும் செய்யுங்கள். மக்கள் முக்கியம், சுதந்திரம் முக்கியம், அமைதி முக்கியம், உக்ரைன் முக்கியம் என்று சொல்லுங்கள். ரஷ்யர்கள் உங்கள் வரிப்பணத்தை போருக்கு  கொடுக்காதபடி ரஷ்யாவை விட்டு வெளியேறுங்கள். ரஷ்ய படையெடுப்பைத் தடுக்க  நாட்டிற்கு தேவையான ஆயுதங்கள் உட்பட உக்ரைனுக்கு பயனுள்ள மற்றும்  கட்டுப்பாடற்ற ஆதரவை நேட்டோ நாடுகள் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்,’ என்று கூறியுள்ளார்.

மேலும் 6 ஆயிரம் ஏவுகணைகளை வழங்கியது இங்கி. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அளித்துள்ள பேட்டியில், ‘உக்ரைனுக்கு ராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை எங்களது நட்பு நாடுகளுடன் சேர்ந்து வழங்கி வருகிறோம். அந்த வகையில் உக்ரைனுக்கு மேலும் 6,000 ஏவுகணைகள் வழங்கப்பட்டுள்ளன. பீரங்கி எதிர்ப்பு மற்றும் ஆயுதங்கள் உட்பட, 25 மில்லியன் பவுண்டுகள் (33 மில்லியன் டாலர்) மதிப்பிலான தளவாடங்கள் அனுப்பப்படும்,’ என்றார். இங்கிலாந்து ஏற்கனவே 4,000க்கும் மேற்பட்ட பீரங்கி எதிர்ப்பு ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

ரஷ்ய பங்குச் சந்தை மீண்டும் தொடக்கம்
உக்ரைன்  மீதான தாக்குதலை தொடர்ந்து ரஷ்ய பங்கு சந்தை மூடப்பட்டது. விலைகள் சரிந்து  கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு ரஷ்ய பங்குச் சந்தை கடுமையான  கட்டுப்பாடுகளின் வரையறுக்கப்பட்ட வர்த்தகத்தைத் நேற்று தொடங்கியது.

ரஷ்யாவின் கப்பல் தகர்ப்பு
* ஐக்கிய நாடுகள் சபையின்  தரவுகளின்படி, தற்போது 36 லட்சத்திற்கும் அதிகமான உக்ரைன்  மக்கள், அண்டை நாடுகளில் அகதிகளாக  தஞ்சம் அடைந்துள்ளனர்.
* 65 லட்சம் மக்கள் உக்ரைன் நாட்டுக்குள்ளேயே உயிருக்கு பயந்து இடம் பெயர்ந்துள்ளனர்.
* ரஷ்யா மீது உலக நாடுகள் 1.5 டிரில்லியன் டாலர் அளவிற்கு பொருளாதார தடைகள் விதித்துள்ளன.
* ரஷ்யாவின் பெரிய தரையிறங்கும் கப்பலான ஓர்ஸ்க்கை, துறைமுக நகரமான பெர்டியன்ஸ்க் அருகே அழித்ததாக உக்ரைனின் கடற்படை அறிவித்துள்ளது.
* ரஷ்யாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து மேலும் பல தூதரக அதிகாரிகளை வெளியேற்ற ரஷ்யா நடவடிக்கை எடுத்துள்ளது.
* தெற்கு உக்ரேனிய நகரமான கெர்சனை ஆக்கிரமித்துள்ள ரஷ்ய படைகள், நாட்டின் மிக முக்கியமான சினிமா இயக்குனர்களில் ஒருவரை கடத்தி சென்றுள்ளது.

Tags : Afghanistan , Having lost 15,000 people in 10 years in Afghanistan 15,000 Russian soldiers killed in Ukraine in a single month: Chemical, Nuclear weapons Opportunity to use
× RELATED ஆப்கனில் கடும் வெள்ளம்: 33 பேர் பலி