×

ஏபிவிபி மாணவர்களை சிறையில் சந்தித்த விவகாரம் சஸ்பெண்டை எதிர்த்து டாக்டர் சுப்பையா மனு: உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு தள்ளிவைப்பு

சென்னை: சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து டாக்டர் சுப்பையா தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது. தஞ்சையில் பள்ளி மாணவி லாவண்யா மரணத்திற்கு நீதி கேட்டு பாஜவின் மாணவர் அமைப்பான ஏபிவிபியை சேர்ந்தவர்கள் சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டதில் ஈடுபட்டனர். கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட மாணவர்களை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் துறையின் தலைவராக இருந்த டாக்டர் சுப்பையா சிறைக்கு சென்று சந்தித்தார். மருத்துவர் சுப்பையாவின் செயல் அரசு ஊழியருக்கான நடத்தை விதிகளை மீறும் வகையில் இருப்பதாகவும், அரசியல் இயக்கங்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் குற்றம்சாட்டி சுப்பையாவை பணியிடை நீக்கம் செய்து மருத்துவக் கல்வி இயக்குநர் பிப்ரவரி 17ம் தேதி உத்தரவிட்டார்.

 இந்த உத்தரவை எதிர்த்து டாக்டர் சுப்பையா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணகுமார் முன் விசாரணைக்கு வந்தபோது, சுப்பையா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், மனுதாரர் ஏபிவிபி எனும் மாணவர் சங்கத்தின் தலைவராக 2017 முதல் 2020 வரை பதவி வகித்துள்ளார். இந்த இயக்கம் அரசியல் கட்சி அல்ல. சுப்பையா எந்தவிதமான அரசியல் கருத்துகளையும் தெரிவிக்கவில்லை என்று வாதிட்டார். தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் வாதிடும்போது, மாணவி லாவண்யா தற்கொலை விவகாரத்தில் அரசியல் கருத்துகளை தனது டிவிட்டர் பக்கத்தில் டாக்டர் சுப்பையா பதிவு செய்துள்ளார். ஏபிவிபி ஒரு அரசியல் சார்ந்த அமைப்புதான். டாக்டர் சுப்பையா மீது துறைரீதியான விசாரணை நடந்து வருகிறது. அதனை தொடர அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கிருஷ்ணகுமார், டாக்டர் சுப்பையாவின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார். முன்னதாக தனக்கு ஜாமீன் வழங்க கோரி டாக்டர் சுப்பையா தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயசந்திரன், டாக்டர் சுப்பையாவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியிருந்தார். இந்த மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, டாக்டர் சுப்பையா சார்பில் வழக்கறிஞர்கள் ஆர்.சி.பால்கனகராஜ், திவாகர் ஆஜராகினர். மனுவை விசாரித்த நீதிபதி, டாக்டர் சுப்பையாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அவர் விசாரணைக்கு தேவைப்படும்போது ஆஜராக வேண்டும் என்று நீதிபதி நிபந்தனை விதித்தார்.



Tags : Dr. ,Subbaiah ,ABVP ,Court , The affair of meeting ABVP students in jail Oppose Suspend Dr. Subbaiah Petition: Adjournment of judgment in the High Court
× RELATED கண்ணைக் கட்டிக்கொள்ளாதே