×

ஆண்டிபட்டி அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவக்கம்: விவசாயிகள் மகிழ்ச்சி

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே குன்னூர் அம்மச்சியாபுரம் கிராமத்தில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பரவலாக மழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் அனைத்து  ஓடைகளிலும், கண்மாய்களிலும் நீர்வரத்து ஏற்பட்டது. இதேபோல் வைகை அணையின் நீர்மட்டமும் கடந்த ஆண்டு 3 முறை முழு கொள்ளளவை எட்டியது. இதனால் ஆண்டிபட்டியை சுற்றியுள்ள வைகை ஆற்றங்கரையோர பகுதிகளான குன்னூர், அம்மச்சியாபுரம், டி.அணைக்கரைப்பட்டி, தர்மத்துப்பட்டி, மூனாண்டிப்பட்டி, புதூர், புள்ளிமான்கோம்பை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது.

கடந்த ஆண்டு ஓரளவு மழை பெய்ததால் நெல் விளைச்சல் அமோகமாக நடைபெற்று வந்தது. இந்த ஆண்டு கடந்த 2 மாதங்களுக்கு மேலாக மழை பெய்வது நின்றுவிட்ட நிலையில், ஐப்பசி மாதத்தில் நடவு செய்த நெற்கதிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாரானது. கடந்த சில நாட்களாக நெல் அறுவடை செய்யும் பணியும் தீவிரமாக நடைபெற்று வந்தது. அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்களை கொள்முதல் செய்ய கொள்முதல் நிலையம் இல்லாததால் பெரியகுளம், உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு கொள்முதல் நிலையம் அல்லது தனியார் கொள்முதல் நிலையத்தில் நெல்மணிகள் விற்பனை செய்யப்பட்டன.

இதனால் விவசாயிகளுக்கு வீண் அலைச்சலும், செலவுகளும் அதிகரித்து வந்தது. எனவே ஆண்டிபட்டி பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, ஆண்டிபட்டி அருகே குன்னூர், அம்மச்சியாபுரம் பகுதியில் நெல் விவசாயிகளுக்காக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவக்கப்பட்டுள்ளது. இந்த கொள்முதல் நிலையத்தில் கிலோ 20 ரூபாய் 60 பைசாவிற்கும், ஒரு குவிண்டால் 2 ஆயிரத்து 60 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது.

நெல் கொள்முதல் செய்த விவசாயிகளுக்கு அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக பணம் வரவு வைக்கப்படுகிறது. மேலும் ஆண்டிபட்டி பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஆண்டிபட்டியில் அமைக்கப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையத்தை நிரந்தரமாக செயல்படுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Direct Paddy Procurement Station ,Andipatti , Andipatti, Paddy Procurement, Station, Farmers
× RELATED பிரிந்து சென்றவரை சேர்த்து...