×

காட்பாடியில் உள்ள புதிய விளையாட்டு மைதானத்திற்கு பராமரிப்பாளர்கள், பயிற்றுநர்கள் நியமிக்க வேண்டும்: விளையாட்டு வீரர்கள் கோரிக்கை

வேலூர்: காட்பாடியில் உள்ள புதிய விளையாட்டு மைதானத்திற்கு பராமரிப்பாளர்கள், பயிற்றுநர்கள் நியமிக்க வேண்டும் என்று விளையாட்டு வீரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்வதற்கும், போட்டிகள் நடத்துவதற்கும் மாவட்ட அளவிலான விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. பல ஆண்டுகள் கழித்து காட்பாடியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு சொந்தமான 36.68 ஏக்கர் நிலத்தில் விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

கடந்த 2019ம் ஆண்டு ₹16.45 கோடி மதிப்பில் விளையாட்டு மைதான கட்டுமான பணிகள் தொடங்கியது. கடந்தாண்டு இந்த விளையாட்டு மைதானத்திற்கான நிதி ஒதுக்கீடு ₹19 கோடியே 24 லட்சமாக உயர்த்தப்பட்டது. இந்த விளையாட்டு மைதானத்தில் 46 ஆயிரத்து 737 சதுர அடியில் பார்வையாளர் மாடம் மற்றும் நிர்வாக அலுவலகம் பல்வேறு விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நிர்வாக அலுவலக கட்டிடத்தின் தரைதளத்தில் மாவட்ட விளையாட்டு அலுவலர் மற்றும் அலுவலகம் உடற்பயிற்சி அறை ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கும் அறை, சமையல் அறை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.

முதல் தளத்தில் 1,500 பேர் அமரக்கூடிய மேற்கூரையுடன் பார்வையாளர் மாடம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி இட வசதி உள்ளது. கூடைபந்து, ஹாக்கி, கோ-கோ, கபடி, இறகுபந்து, நீச்சல் குளம், கால்பந்து, 400 மீட்டர் தடகள பாதை, மேலும் இரவு நேரத்திலும் விளையாட்டு போட்டிகள் நடத்தும் வகையில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதர வசதிகளாக பார்க்கிங் வசதி, இணைப்புச் சாலை, கழிவறை வசதிகளும் உள்ளன. பல்நோக்கு விளையாட்டு வளாகமாக இந்த மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பெரிய மைதானத்தில் இது ஒன்றாக உள்ளது.

இந்த விளையாட்டு மைதானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதையடுத்து விளையாட்டு போட்டிகள் தற்போது அங்கு நடந்து வருகிறது. ஆனால் விளையாட்டு மைதானத்தை முழுமையாக பராமரிக்க பணியாளர்கள் இல்லை. பயிற்சியாளர்களும் இல்லை. இதுகுறித்து விளையாட்டு வீரர்கள் கூறியதாவது:   வேலூர் மாவட்டத்திற்கு பல ஆண்டுகளுக்கு பிறகு புதிய விளையாட்டு மைதானம் திறக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான பணியாளர்கள், பயிற்சியாளர்கள், உதவியாளர்கள், பணியாளர்கள் நியமனம் செய்ய கோரி மாவட்ட நிர்வாகம் மூலம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பல கோடி ரூபாய் செலவு செய்து விளையாட்டு மைதானம் திறந்து இருந்தாலும், அதை முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். விளையாட்டு வீரர்களுக்கு அனைத்து வசதிகளும் படிப்படியாக மேற்கொண்டால்தான் முழுமையாக செயல்படுத்த முடியும். நீச்சல் குளம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு பயிற்சியாளர்களும், பராமரிப்பாளர்களும் இல்லை. மைதானத்தை முழுமையாக பராமரிக்க வேண்டும். குறைந்த அளவு பணியாளர்கள் மட்டுமே தற்போது பணியில் உள்ளனர். அவர்களால் அந்த பணியை மேற்கொள்ள முடியவில்லை. எனவே விரைவில் பணியாளர்களை முழுமையாக நியமனம் செய்ய வேண்டும். அப்போது விளையாட்டு வீரர்கள் சிறந்த முறையில் பயற்சி பெற்று பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்ள முடியும். தமிழக அரசு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Katpadi, new game, caregivers, instructors, appoint
× RELATED யானை தாக்கி விவசாயி பலி