×

பாஜவின் சூழ்ச்சியை முறியடிக்க கோயில் திருவிழாக்களில் இனிமேல் கம்யூனிஸ்ட் கட்சியும் பங்கேற்கும்: பாலகிருஷ்ணன் பேட்டி

மதுரை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது மாநில மாநாடு வரும் 30ம் தேதி முதல் ஏப். 1ம் தேதி வரை, மதுரையில் நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நேற்று மதுரையில் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஒன்றிய பாஜ அரசு கற்பனை செய்ய முடியாத அளவுக்கு நாட்டின் பன்முகத்தன்மையை சீரழித்து வருகிறது. தமிழக ஆளுநர், பல்கலைக்கழக வேந்தராக இருக்கக்கூடாது. துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அவரிடம் இருந்து ரத்து செய்யவேண்டும். அதற்கான சட்ட நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும். ஒற்றை கலாச்சாரத்தை திணிக்க ஒன்றிய அரசு முயல்கிறது. இது நாட்டின் ஒற்றுமைக்கு ஆபத்தை ஏற்படுத்தும். பாஜவிற்கு எதிராக தமிழக மக்களை திரட்டவுள்ளோம். சின்ன சின்ன பிரச்னைகளை எல்லாம் பாஜக பெரிதாக்கி மத கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது. மதமாற்றம் இல்லாத நிலையில் அதை பேசி பிரச்னையாக பாஜக மாற்றுகிறது.

தமிழகத்தில் காவி கலாச்சாரத்தை திணிக்க பாஜ முயற்சிக்கிறது. கோயில் திருவிழாக்களில் ஆர்எஸ்எஸ் கொடியை கட்டி, அவர்கள் விழா நடத்துவது போல் தங்களது கொள்கையை நுழைக்கின்றனர். இதன்மூலம், பாஜ பிரித்தாளும் சூழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இதற்கு எதிராக கோயில் திருவிழாக்களில் இனிமேல் கம்யூனிஸ்ட் கட்சியும் பங்கேற்கும். பாஜகவை எதிர்க்க திமுகவோடு இணைந்து தொடர்ந்து பணியாற்றுவோம். உத்தரபிரதேச மாநில தேர்தலுக்காக நிறுத்தி வைக்கப்பட்ட பெட்ரோல், டீசல் விலையை தற்போது உயர்த்தியுள்ளனர்.

கடந்த ஒரு வருடத்தில் ரூ.270 வரை சிலிண்டர் விலையை உயர்த்தியுள்ளனர். தேர்தல் வந்தால் மட்டும் விலை உயர்வு செய்யாமல் நடிக்கின்றனர். தமிழகத்தில் ஆணவ படுகொலையை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும், இலங்கையின் பொருளாதாரம் திவால் நிலைக்கு சென்று விட்டது. ஆள்தான் வித்தியாசம் ஆனால் ஆடை ஒன்று என்பது போலத்தான் இந்தியாவும் உள்ளது. இலங்கையை போன்று இந்தியாவிற்கும் இதே நிலை உருவாக வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Communist Party ,Baja ,Palakrishnan , Bajaj's maneuver, to defeat, temple festival, communist, Balakrishnan
× RELATED கரத்தாலும், கருத்தாலும் உழைக்கும்...