×

கொரோனா வரலேயேடா அவளுக்கு!

நன்றி குங்குமம் தோழி

என்ன செய்வது தோழி?

அன்புடன் தோழிக்கு,

எனக்கு இப்போது வயது 35. பிகாம் படித்துள்ளேன். கல்லூரி முடித்ததும் வேலைக்கு செல்ல ஆசைப்பட்டேன்.  ஆனால்  கல்யாணம் செய்து வைக்கிறோம். மாமியார் வீட்டுக்கு சென்ற பிறகு வேலைக்கு போகலாம் என்று சொல்லிவிட்டனர். அப்பா, அம்மா சொன்ன மாப்பிள்ளைக்கு மறுப்பு சொல்லாமல் தலையை நீட்டினேன். அவர் மத்திய அரசு பணியில் இருக்கிறார். பட்டணத்தில் வீடு. வசதியானவர்கள். அவருக்கு 2 அண்ணன், ஒரு அக்கா என்பது மட்டும்தான்  திருமணத்திற்கு முன்பு எனக்கு தெரிந்தது.

திருமணமான சில நாட்களில் பிரச்னைகள் ஆரம்பித்தன. எது செய்தாலும் மாமியார் குற்றம் சாட்டுவார்.  விளக்கம் சொன்னாலே கோபப்படுவார். இதெல்லாம் எல்லோர் வீட்டிலும் நடப்பதுதானே என்று நினைத்தேன். ஆனால் மிரட்டுவார். நாம் கொஞ்சம் குரலை உயர்த்தினால், உடனே பிள்ளையை கூப்பிடுவார். அவரும் தன் பங்குக்கு என்னை திட்டுவார். ஒரு கட்டத்தில் அடிக்கவும் செய்தார். அதன் பிறகு அடிப்பதும் உதைப்பதும் தொடர்கதையானது.

எங்கள் வீட்டில் சொன்னால், அவர்கள் வந்து கேட்பார்கள். அப்போது என் மாமியார், ‘உங்க பொண்ணுக்கு புத்தி சொல்லிட்டு போங்க... பெரியவங்க சின்னவங்க மரியாதை இல்லாம பேசறா’ என்று என்மீதுதான் குற்றம் சொல்வார். அவர்கள்  போனதும், ‘உங்க வீட்டுக்கு போன் செய்து சொல்லிட்டீயா... அவங்களால எங்கள ஒண்ணும் பண்ண முடியாது.. உன்ன சாவடிச்சி போட்டாக் கூட கேட்க ஆள் கிடையாது தெரிஞ்சுக்கோ’ன்னு  திட்டுவார்கள்.

ஒரு கட்டத்தில் அதெல்லாம்  எனக்கு பழகிவிட்டது.  பிரச்னை வரும் நாட்களில் என்னை தனியாக சமைத்துக் கொள்ள சொல்லிவிடுவார்கள். அதற்கும் ரேஷன் கடையில் தருவது போல் அளவு பார்த்து கொஞ்சமாக தருவார்கள். மற்றதை எடுக்க முடியாதபடி பெட்டியில் வைத்து பூட்டி விடுவார்கள். அப்படி தனிச் சமையல் செய்யும் போது அவர்கள் கறி, மீன் என்று வாங்கி வந்து சமைத்துச் சாப்பிடுவார்கள். ஒன்றும் கேட்க முடியாது.

குழந்தை பிறந்தால் எல்லாம் மாறும் என்று எங்கள் வீட்டில் சொன்னார்கள். ஆனால் ஒன்றுக்கு இரண்டாக குழந்தைகள் பிறந்தும் எதுவும் மாறவில்லை. குழந்தைகளிடமும் பாரபட்சம் காட்டுகிறார்கள். வீட்டில் ஏசி இருக்கிறது. அம்மாவும், பிள்ளையும் மட்டும் அந்த அறையில் படுப்பார்கள். குழந்தைகளை கூட அனுமதிக்க மாட்டார்கள். எங்கள் அறையில் கட்டில் கூட கிடையாது. கழற்றி பரணில் வைத்து விட்டனர். தரையில்தான் படுக்க வேண்டும்.  இதையெல்லாம் பார்த்து மாமனார் எந்த கேள்வியும் கேட்கமாட்டார். மாமியார் இருக்கும் போது குழந்தைகளை கூட கொஞ்ச மாட்டார். மாமியார் இல்லாவிட்டால் குழந்தைகளிடம் பேசுவார். அவர்களுக்கு சாப்பிட, விளையாட ஏதாவது வாங்கித் தருவார்.

என் கணவரும் அப்படித்தான். மாமியார் அவர் மகளின் வீட்டுக்கோ, உறவினர் வீட்டு விசேஷங்களுக்கு அரிதாக செல்லும் போது மட்டும் என்னிடம் கொஞ்சி பேசுவார்.  குழந்தைகளிடம் விளையாடுவார். ஆனால் அவரது அம்மா வீட்டுக்குள் நுழைந்த அடுத்த நிமிடமே மாறிடுவார். மொத்தத்தில் அம்மா சொல்வதை தட்டமாட்டார்.

குழந்தைகளின் விடுமுறைகளின் போது எங்கள் அம்மா வீட்டுக்கு போவதற்கும் வேண்டா வெறுப்பாக அனுமதி தருவார்கள். அங்கு போனதும் கணவர் அடிக்கடி போன் செய்வார். ஆனால் பேச மாட்டார்.  எடுக்காமல் விட்டால் போன் செய்து ‘எங்கே ஊர் சுத்திட்டு இருக்கியா’ என்று சண்டை போடுவார். அவரே எங்க வீட்டுக்கு வரும்போது அமைதியாக நல்ல பிள்ளைப் போல் இருப்பார். எங்க வீட்டிலும் அவரை நன்றாக பார்த்துக் கொள்வார்கள்.

எங்கள் வீட்டில் நல்லது, கெட்டது என எது நடந்தாலும் மாமியார்  வந்ததேயில்லை. எப்போதும் மற்றவர்களிடம் ஆணவமாகவே நடந்து கொள்வார். அவர் வராததால் எனக்கு உள்ளுக்குள் நிம்மதியாகத்தான் இருக்கும். திருமணமாகி  13 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் நிலைமை மாறவில்லை. இவரது கொடுமைகளை  சகித்துக் கொள்ள முடியாமல் முதல் மருமகள்  கணவரை கூட்டிக் கொண்டு தனிக்கூடித்தனம் போய்விட்டார்.  அவர்கள் இங்கு வருவதேயில்லை. 2வது மருமகள் எங்கள் திருமணத்திற்கு முன்பே விவாகரத்து செய்துவிட்டாராம்.

இதெல்லாம் திருமணமாகி கொஞ்ச நாட்கள் கழித்துதான் எனக்கு தெரிந்தது. வீட்டு விஷயம் வெளியில் தெரிந்து விடும் என்று அக்கம்பக்கத்தினரிடம் என்னை பேச விடமாட்டார்கள். ஆனால் அவர்கள் மூலம்தான்  இந்த விவரங்கள் எனக்கு தெரிந்தது. அவர்களிடம் என்னை ஏன் பேச விடுவதில்லை என்பதும் புரிந்தது.

கொரோனா பிரச்னை தொடங்கியதில் இருந்து கணவர் வேலைக்கு செல்வதில்லை. வீட்டில்தான் இருக்கிறார். கூடவே தினமும் பிரச்னைகளும் அதிகமாகி விட்டன. வழக்கமாக மாமனார்தான் வீட்டுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி  வந்து தருவார். கொரோனா பிரச்னை வந்த பிறகு என்னைதான் காய்கறியில்  இருந்து மளிகை பொருட்கள் வரை  வாங்கி வர அனுப்புகிறார்கள்.  

ஒருமுறை அப்படி கடைக்கு போய் விட்டு வரும்போது என் மாமியார், தன் பிள்ளையிடம், ‘என்னடா இத்தனை முறை கடைக்கு அனுப்பியும் இவளுக்கு கொரோனா வரவேயில்லை. அடுத்த முறை மாஸ்கை புடுங்கிட்டு அனுப்புடா’ என்று சொல்லிக் கொண்டிருந்தார். அதனால் கடைக்கு போகும் போது முகக்கவசத்தை மறைத்து எடுத்துச் செல்வேன். வெளியில்போன பிறகு முகக்கவசத்தை அணிந்து கொள்வேன்.

கொரோனாவால் ஊரடங்கு ஆரம்பித்ததில் இருந்து ஓயாத வேலை ஒரு பக்கம் என்றால் மாமியார், கணவரின் டார்ச்சர் இன்னொருப் பக்கம். நான் எப்போதாவது கொஞ்ச நேரம் ஓய்வில் இருந்தால் அடுத்த நிமிடமே எதையாவது சொல்லி திட்டுவார்.  எதிர்த்து பேசினால் என் கணவரை விட்டு என்னை அடிக்கச்சொல்வார். திட்டும்போது கண்டு கொள்ளாமல் விலகிப்போனாலும் பிரச்னைதான்.

என்னை அடிப்பதை பார்த்து குழந்தைகள் அழுதால், ‘பார்றா இந்த பசங்களுக்கு நம்ம மேல பாசமேயில்லை. அப்படி கொழந்தைகளுக்கு சொல்லிக் குடுத்து வளக்கிறா’ என்று எரியும் நெருப்பில் எண்ணையாக வார்த்தைகளை கொட்டுவார். இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் அடி உதை எல்லாம் தினசரி வாடிக்கையாகி விட்டது. காலையில் எழுந்து, இரவு தூங்குவதற்குள் இரண்டு, மூன்று தடவையாவது அடி வாங்கி விடுவேன். என்ன செய்வது புரியவில்லை.

எங்கள் அப்பா, அம்மா, உறவினர்கள்  அமைதி விரும்பிகள். வம்பு, தும்பு வந்தால்  விலகிச் செல்பவர்கள். அதனால் இங்கு நடக்கும் எல்லாவற்றையும் அவர்களிடம் சொல்வதில்லை. அதே நேரத்தில் இங்கே நரகத்தில் எத்தனை நாட்கள் வாழ்வது என்று கவலையாகவும் இருக்கிறது. ஊரடங்கு காலத்தில் கொரோனா வந்தவர்கள் கூட நிம்மதியாக இருக்கிறார்கள். அதனால் கொரோனா வந்திருந்தால் கூட 14 நாட்கள் மருத்துவமனையில் நிம்மதியாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.

ஆனால் அந்த 14 நாட்கள்  என் குழந்தைகள் எப்படி கஷ்டப்படுவார்களோ என்றும் யோசிக்கிறேன். அந்த யோசனைதான் என்னை எந்த முடிவையும் எடுக்க முடியாமல் வைத்திருக்கிறது. என்ன செய்யலாம் தோழி? என் கணவர், மாமியார் போன்றவர்களை திருத்த முடியுமா? என் வேதனையையும், வலியையும் சொல்லி புரிய வைக்க முடியுமா? அடுத்தவர்களை துன்புறுத்தி மகிழ்ச்சி கொள்ளும் அவர்களின் மனநிலையை  மாற்ற முடியுமா? இந்த கொடுமைகளில் இருந்து எப்படி விடுபடுவது... எனக்கு வழிகாட்டுங்கள் தோழி?

இப்படிக்கு,
பெயர் வெளியிட விரும்பாத வாசகி.


நட்புடன் தோழிக்கு,

உங்கள் கடிதத்தை படித்தேன். சராசரி குணத்துடன்,  ஆண் ஆதிக்க மனப்பான்மையுடன் இருக்கும் கணவன். நம் சமுதாயத்தில் மாமியாரின் குணாதிசயங்களை அப்படியே பெற்றுள்ள மாமியார். தட்டிக் கேட்காத மாமனார்.  இப்படிப் பட்டவர்களுடன்தான் நீங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள்.  நம் சமூகத்தில் பெரும்பாலான பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சனையே அப்படியே உங்களுக்கும் வாய்த்திருக்கிறது.

இந்த மாதிரி பிரச்சனைகளில் பெண்ணின் வீட்டில் உள்ளவர்களின் மனப்பான்மை, பெண்ணின் பிரச்சனைகளை புரிந்துகொண்டு தீர்க்க முயல்வது சரியாக இருக்கும். உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் அவ்வப்போது வந்து கேட்கிறார்கள். இருந்த போதும் அவர்களால் முழுமையாக உங்களுக்கு உதவி செய்ய இயலவில்லை. இப்படி இருக்கின்ற சூழ்நிலையில் நிலைமையை நீங்கள் சமாளிப்பது கடினமே. உங்கள் கணவர் வீட்டு குடும்பம் பெண்களை பற்றி குறைவான மதிப்பீடு வைத்துள்ளது.

மருமகளை எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம். அவளை அதிகாரம் செய்ய தங்களுக்கு உரிமை உண்டு என்ற மனப்போக்கு தெரிகிறது. மரு மகள் இன்னொரு மகள் என்ற புரிதல் கூட அவர்களுக்கு  இல்லை.  அம்மாவின் கட்டளைக்கு உங்கள் கணவர்  அடிபணிகிறார். மனைவியை  அன்பாகவும் அக்கறையுடனும் கவனிக்க வேண்டும். அவளும் குழந்தைகளுக்குத் தாய் என்ற எண்ணம் உங்கள் கணவருக்கு சிறிதும் இருப்பதாக தெரியவில்லை. அதுவும் தனது குழந்தைகளின் தாய் என்ற அடிப்படை புரிதல் கூட அவருக்கு இல்லை.

நீங்களும் இதெல்லாம் மாறிவிடும் என்று எண்ணி உள்ளீர்கள். இப்போதைய சூழ்நிலையில் அவர்கள் உங்களை நடத்தும் விதம் மிகவும் மோசமானதாக மாறியுள்ளது. நீங்கள் சொல்வதையெல்லாம்  வைத்துப் பார்க்கும் பொழுது அவர்கள் உங்கள் பிரச்சினைகளை புரிந்து கொண்டு இனி உங்களை சரியாக நடத்துவார்கள் என்று தோன்றவில்லை. உங்கள் உணர்வுக்கு மதிப்பு அளிக்க வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. உங்கள் மாமியார், கணவர் என அந்தக் குடும்பம் மிகவும் பிற்போக்குத் தனமான குடும்பமாக உள்ளது.

அவர்களின் மனப்பான்மை மாறுவதற்கு வாய்ப்பு  இருப்பதாகத் தோன்றவில்லை. இப்படி ஒரு குடும்பச் சூழ்நிலையில் இருக்கலாமா வேண்டாமா என்பதை நீங்கள்தான் முடிவு செய்யவேண்டும். உங்களின் பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர்களுடன் கலந்து ஆலோசியுங்கள்.  நீங்கள் 2 குழந்தைகளின் தாய். என்றாலும் மாமியார்  வீட்டில் வசிப்பது உங்களின் வாழ்க்கையை, குழந்தைகளின் வாழ்க்கையை  எப்படி பாதிக்கும் என்பதை யோசித்துதான் ஆக வேண்டும்  மீண்டும் சொல்கிறேன் உங்களுக்கான முடிவை நீங்கள் தான் எடுக்க வேண்டும்.

இது தனிமனித பிரச்சனை இல்லை. வைத்தியம் செய்ய... உங்களைச் சார்ந்தவர்கள் மற்றும் சமுதாயம் சார்ந்த பிரச்சனை. உங்களை சார்ந்தவர்களை மாற்றி அவர்களுடன் காலம் தள்ள முடியுமா என்று நீங்கள்தான் யோசிக்க வேண்டும். பொதுவாக இந்த மாதிரி பிரச்சனைகளில் இரண்டு விதமாக நாம் யோசிக்க இயலும். ஒன்று இந்த சூழ்நிலையில் இருந்து விலகி வாழ்வது அல்லது  அந்த சூழ்நிலையை ஏற்றுக்கொண்டு அதில் வரும் சிக்கல்களை கையாளுவது.

அவர்களைப்பற்றி உங்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே அவர்களை சமாளிக்க முடியுமா முடியாதா என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். உங்கள் கணவர் குடும்பத்தை விட்டு விலகிச் சென்றால் உங்கள் வீட்டைச் சார்ந்தவர்கள் உங்களுக்கு எவ்வளவு உறுதுணையாக இருப்பார்கள் என்பதை அலசி ஆராயுங்கள்.. சட்டரீதியான நடவடிக்கைகள் குறித்தும் யோசிக்கலாம். அதன் விளைவுகள் குறித்தும் ஆலோசிக்கலாம்.

உங்கள் குழந்தைகள் வளர்ந்தவுடன், குறிப்பிட்ட வயது வந்தவுடன்  அவர்களிடம் இந்த விவரங்களை பகிர்ந்து கொண்டு முடிவை எடுக்கலாம்.அதுவரை நீங்கள் அவர்களை எவ்வாறு கையாளப் போகிறீர்கள் என்பதையும் முடிவு செய்ய வேண்டும். அவர்களே மாறினால்தான் உண்டு.  கொடுமைக்கார மாமியார், கொடூர கணவர்களை  சரி செய்யும்  சிகிச்சை முறை ஏதுமில்லை. அப்படி இருந்தால் பெண்கள் இவ்வாறு கொடுமைக்கு ஆளாகும் போது தடுக்கலாம். மனநல மருத்துவராக உங்களுக்கு ஏற்படும் மன சிக்கல்களுக்கு ஆலோசனை சொல்ல இயலும். உங்களுக்கான முடிவை எடுக்க இயலாது. குடும்பம் சார்ந்த,  உறவினர் சார்ந்த சிக்கல்களுக்கு தீர்வு சொல்வது கடினம்.

நீங்கள் செய்யவேண்டியது அவர்களுடன் விலகியிருப்பது சாத்தியமா  இல்லை அவர்களுடன் வாழ்ந்துகொண்டு சமாளிப்பது சாத்தியமா.... இந்த இரண்டில் எதை உங்களால் செய்ய முடியுமோ அதை செய்யுங்கள். என்ன செய்வது என்று  முடிவு எடுக்க முடியாமல் மன உளைச்சல் ஏற்பட்டால் மனநல மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள். நல்லதே நடக்கும்.

தொகுப்பு: ஜெயா பிள்ளை

வாசகிகள் கவனத்துக்கு,
பிரச்னைகள் குறித்து எழுதும் போது பிரச்னைகளுடன் முழு விவரங்களையும் குறிப்பிடுங்கள். சம்பவங்களை, காரணங்களை தெளிவாக... ஏன் விரிவாக கூட எழுதுங்கள். அப்போதுதான் தீர்வு சொல்பவர்களுக்கு வசதியாக இருக்கும். பெயர், முகவரி போன்றவற்றைதான் தவிர்க்க சொன்னோம். விவரங்களை அல்ல...

என்ன செய்வது தோழி
பகுதிக்கான கேள்விகளை எழுதி
அனுப்ப வேண்டிய முகவரி


‘என்ன செய்வது தோழி?’
குங்குமம் தோழி,
தபால் பெட்டி எண்: 2924
எண்: 229, கச்சேரி சாலை,
மயிலாப்பூர், சென்னை - 600 004


தொகுப்பு: அன்னம் அரசு

படங்கள்: ஜி.சிவக்குமார்

Tags : Corona Varaleyada ,
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!