×

முதுமலையில் மானை வேட்டையாடிய புலி: புகைப்படங்கள் வைரல்

கூடலூர்: முதுமலையில் மான் ஒன்றை புலி வேட்டையாடும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, கரடி, யானை, மான் உள்ளிட்ட விலங்குகள் வசித்து வருகின்றன. இவற்றை சுற்றுலா பயணிகள் காண வேண்டும் என்பதற்காக வனத்துறை சார்பில் தினமும் வாகன சவாரி, யானை சவாரி செய்யப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு தெப்பக்காடு சரகம் வனப்பகுதிக்குள் வாகன சவாரி சென்ற சில சுற்றுலா பயணிகள் புலி ஒன்றை பார்த்தனர். சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் வனப்பகுதியை விட்டு வாகன சவாரி செல்லும் சாலையின் ஓரத்திற்கு வந்த அந்த புலியை கண்டு சுற்றுலா பயணிகள் கூச்சலிட்டனர்.பின்னர், அமைதியாக புலியை புகைப்படம் எடுத்தனர். அப்போது, வாகனத்தின் அருகில் வந்த புலி, பதுங்கி சாலையை கடந்து சென்றது.

சிறிது நேரத்தில் அந்த பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த மானை நோக்கி பாய்ந்தது. பின்னர், மானை வேட்டையாடி கொன்ற காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். பொதுவாக புலி, சிறுத்தைப்புலிகளை எளிதில் காண முடியாது என்ற நிலை இருந்து வரும் நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்தில் புலி ஒன்று மானை வேட்டையாடியதை கண்ட சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Mudumalai , Mudumalai, deer hunting tiger, photos
× RELATED முதுமலையில் பூத்துக்குலுங்கும் சிவப்பு கொன்றை மலர்கள்