×

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு!: அவை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவிப்பு..!!

சென்னை: தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்து மறுதேதி குறிப்பிடாமல் அவை ஒத்திவைக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அரசுப்பள்ளியில் 10ம் வகுப்பு முடித்து பாலிடெக்னிக் கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என தெரிவித்தார். அடுத்த 5 ஆண்டுகளில் 1000 கோடி ரூபாய் செலவில் அரசு கல்லூரிகள் மேம்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார். தொழில் பூங்காக்களை அமைக்க நிலம் கையகப்படுத்தப்படும் போது விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கையகப்படுத்தப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். பேரவையில் நேரமில்லா நேரத்தில் எம்.எல்.ஏ. எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு தெரிவித்தார்.

10 ஆண்டுகளில் விவசாயிகள் வாழ்க்கையில் முன்னேற்றம் நிச்சயம் ஏற்படும் என்று வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உறுதியளித்தார். தற்போது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் பலனாக எந்த விவசாயியும் கடன் கேட்டு வங்கி வாயிலுக்கு செல்லாத நிலை ஏற்படும் என்று வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்துக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதிலுரை அளித்தார். துபாய் செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், புதிய முதலீடுகளை ஈர்ப்பார் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். கருணாநிதி இன்று இருந்திருந்தால் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருப்பார் என்றும் குறிப்பிட்டார்.

5 சவரனுக்கு கீழ் நகைக்கடன் தள்ளுபடியான 5.48 லட்சம் பேருக்கு நகைகள் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார். பொது நகைக்கடன் தள்ளுபடிக்காக நேற்று ஆயிரம் கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டது என்றும் அமைச்சர் தெரிவித்தார். பேரிடர் காலங்களில் வாடகைதாரர் குடியிருக்கும் வீட்டின் வளாகம் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டால் அதனை சரிசெய்து மீண்டும் வாழ தகுதியுடையதாக வீட்டு உரிமையாளர் மாற்றி தரும் வரை வாடகை வசூல் செய்யக்கூடாது என்ற சட்ட மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 19 சட்ட மசோதாக்கள், ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரிடம் நிலுவையில் உள்ளதாக பேரவையில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்தது. தேதி குறிப்பிடாமல் அவை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.


Tags : Speaker , Tamil Nadu Legislative Assembly, Budget Session, Speaker
× RELATED ராகுல், ஓம்பிர்லா தொகுதிகளில் இன்று...