×

வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக ஆசியாவின் மிகப்பெரிய துலிப் மலர்த்தோட்டம் திறப்பு!: கண்கவர் மலர்களை காண படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்..!!

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் வசந்தகாலத்தை வரவேற்கும் விதமாக ஆசியாவின் மிகப்பெரிய துலிப் மலர்த்தோட்டம் பார்வையாளர்களுக்கு திறக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் தலைநகரில் தால் ஏரியை ஒட்டியுள்ள இந்திராகாந்தி நினைவு துலிப் மலர்த்தோட்டம், ஆசியாவிலேயே மிகப்பெரிய துலிப் மலர்த்தோட்டமாகும். 74 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த தோட்டத்தில் பல வண்ணங்களில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட துலிப் மலர்கள் வளர்க்கப்படுகின்றன. இந்நிலையில் வசந்தகாலத்தை ஒட்டி துலிப் மலர்த்தோட்டம் பார்வையாளர்களுக்கு திறக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் தலைமை செயலாளர் ஏ.கே.மேத்தா, துலிப் மலர்த்தோட்டத்தை திறந்து வைத்தார். கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்து, துலிப் மலர்த்தோட்டத்தை காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஜம்மு-வுக்கு படையெடுப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மலர் வளர்ப்புத்துறை ஆணையர் ஷேக் பயாஸ் தெரிவித்ததாவது, துலிப் மலர்த்தோட்ட பணியில் கடந்த 9 மாதங்களாக ஈடுபட்டு வந்தோம். இந்த ஆண்டு வழக்கத்தைவிட அதிக சுற்றுலா பயணிகளை நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று கூறினார்.

நடப்பாண்டில் 6 புதிய வகை துலிப் மலர்கள் தோட்டத்தில் வளர்க்கப்பட்டுள்ளனவாம். கண்களை கொள்ளைகொள்ளும் வகையில் காட்சியளிக்கும் துலிப் மலர்களை காண ஏராளமான பார்வையாளர்கள் குவிந்து வருகின்றனர். தோட்டத்திற்கு வருகை தருபவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இசை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.


Tags : Asia , Asia, tulip flower garden, spectacular flower, tourists
× RELATED மகளிர் ஆசிய கோப்பை 2024: ஜூலை 21ம் தேதி இந்தியா – பாகிஸ்தான் மோதல்!