×

அரசுப்பள்ளிகளில் 10வது முடித்து ஐடிஐ சென்றாலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை!: பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு..!!

சென்னை: அரசுப்பள்ளிகளில் 10வது முடித்து ஐடிஐ சென்றாலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம், வணிகவரித்துறை உள்ளிட்டவை சீர்திருத்தப்படும் என்றும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார். நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உரையாற்றி வருகிறார். அப்போது பேசிய அவர்,

டாஸ்மாக் நிர்வாகம் சீர்திருத்தப்படும்:

டாஸ்மாக் நிர்வாகம், வணிகவரித்துறை உள்ளிட்டவை சீர்திருத்தப்படும். நிதித்துறையில் ஒற்றைச்சாளர முறை கொண்டுவரப்படும். சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் மைனிங் கொள்கை உருவாக்கப்படும். என்று குறிப்பிட்டார்.

பாலிடெக்னிக் மாணவிகளுக்கும் ரூ.1000 உதவித்தொகை:

அரசுப்பள்ளிகளில் 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. செல்லும் மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும். அரசு பள்ளி மாணவிகள் 12ம் வகுப்பு முடித்துவிட்டு கல்லூரிகள் சென்றால் மாதம் ரூ.1000 என அறிவிக்கப்பட்டிருந்தது.

தமிழ்நாடு ஏழை மாநிலம் இல்லை:

தமிழ்நாடு ஏழை மாநிலம் அல்ல என்பதற்கு பல்வேறு புள்ளி விவரங்களை அடுக்கி நிதியமைச்சர் விளக்கமளித்தார். வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் 52 சதவீத இளைஞர்கள் உயர்கல்வி பயில்கின்றனர். அரசு வழங்கிய வீடுகளில் வசிப்பவர்கள் வெறும் 14 சதவீதம் பேர்தான் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல் தெரிவித்தார். தமிழ்நாட்டில் 66 சதவீதம் குடும்பத்தினர் இருசக்கர வாகனம் வைத்துள்ளனர். தமிழ்நாட்டில் 75 சதவீத குடும்பங்கள் சொந்த வீட்டில் வசித்து வருகின்றனர். நகர்ப்புறங்களில் உள்ள மக்களில் 60 சதவீதம் பேரும், கிராமங்களில் உள்ளவர்களில் 90 சதவீதம் பெரும் சொந்த வீட்டில் வசிக்கின்றனர். தமிழ்நாட்டில் 2.06 கோடி குடும்ப அட்டைகள் உள்ள நிலையில் 2.6 கோடி இருசக்கர வாகனங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் 50 சதவீத வீடுகளில் குளிர்சாதன பெட்டிகள் உள்ளன. தமிழகத்தில் ஒரே குறை ஒட்டுமொத்த உழைக்கும் வயதில் உள்ளவர்களில் 52 சதவீதம் பேருக்கு தகுதியான வேலை இல்லை என்பது தான் என்று தெரிவித்தார்.

அதிமுக ஆட்சியில் கடன் அளவு அதிகரிப்பு:

கலைஞர் ஆட்சி நிறைவடையும்போது தமிழ்நாடு அரசின் கடன் மாநில ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 17.33 சதவீதமாக இருந்தது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு 15.55 சதவீதமாக கடன் அளவு குறைக்கப்பட்டது. ஜெ.ஆட்சிக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் மீண்டும் கடன் மளமளவென்று உயர்ந்துவிட்டது. அதிமுக ஆட்சியில் கடன் அளவு பெருமளவு அதிகரித்துவிட்டது. அரசின் கடன் அளவை குறைப்பதற்கு அரசு உறுதிபூண்டுள்ளதாக நிதியமைச்சர் அறிவித்தார். தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 15.55 சதவீதம் ஆக இருந்த கடன் அளவு பழனிசாமி ஆட்சியில் 25 சதவீதத்துக்கும் மேல் கூடிவிட்டது என்று தெரிவித்தார்.

காமராஜர் பெயரில் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம்:

காமராஜர் பெயரில் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம் ரூ.1000 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார். கல்லூரி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கல்லூரி கட்டடங்கள் கட்டப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.


Tags : ITI ,Finance Minister ,Palanivel Thiagarajan , Government School, ITI, Student, Rs.1000, Palanivel Thiagarajan
× RELATED கடந்த அதிமுக ஆட்சியில் 4 ஆண்டுகளாக...