×

கோவை மெட்ரோ ரயிலுக்கான விரிவான திட்ட அறிக்கை தயார்.. ஜூனுக்குள் அத்திக்கடவு - அவினாசி திட்ட பணிகள் முடியும்!: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு..!!

சென்னை: கோவை மெட்ரோ ரயிலுக்கான  விரிவான திட்ட அறிக்கை தயார் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார். நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உரையாற்றி வருகிறார். அப்போது பேசிய அவர்,

கோவை மெட்ரோ ரயில் - விரிவான திட்ட அறிக்கை தயார்:

கோவை மெட்ரோ ரயிலுக்கான  விரிவான திட்ட அறிக்கை தயார் நிலையில் உள்ளன. மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு நடைபெற்று வருகிறது. கோவை மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்டறியப்பட உள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜூனுக்குள் அத்திக்கடவு - அவினாசி திட்ட பணிகள் முடியும்:

அத்திக்கடவு - அவினாசி திட்ட பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துவிட்டன. அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை முழுமையாக முடிக்க இந்த பட்ஜெட்டில் ரூ.1902.71 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் மாதத்துக்குள் அத்திக்கடவு - அவினாசி திட்டம் நிறைவடையும்.

பட்ஜெட்டில் ஏழைகளுக்கு முக்கியத்துவம்:

ஏழைகளுக்கு பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை என்ற புகாருக்கு நிதியமைச்சர் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்திருக்கிறார். தமிழக நிதிநிலை அறிக்கையில் அனைத்து திட்டங்களிலும் ஏழைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இருளர்கள் உள்ளிட்ட பழங்குடியினருக்கு ஆயிரம் வீடுகள் கட்ட ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு:

காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு ரூ.200 கோடி இதுக்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார். நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அனைவரின் கருத்துக்கும் மதிப்பு அளித்தே திமுக அரசு செயல்பட்டு வருகிறது என்று கூறினார்.

சர்வதேச நிபுணர் குழு பணி - அமைச்சர் விளக்கம்:

உலகளாவிய நிபுணர் குழு அமைத்ததற்கான காரணம் பல்வேறு கருத்துக்களை கேட்டு ஒரு நல்ல முடிவை எடுப்பதற்காகத்தான் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். முதலமைச்சரின் தொலைநோக்கு பார்வையில் 5 வெவ்வேறு நோக்கம் கொண்ட மற்றும் நிபுணத்துவம் உடையவர்கள் ஆவர். தமிழ்நாடு அரசு அமைத்துள்ள இப்படிப்பட்ட ஒரு நிபுணர் குழு உலகின் எந்த நாட்டிலும் இல்லை. இதுபோன்ற குழு பிற நாடுகளில் கூட கிடையாது. சர்வதேச நிபுணர் குழுவினரால் தமிழ்நாடு அரசுக்கு பலன் கிடைத்துள்ளது என்று அமைச்சர் பெருமிதம் தெரிவித்தார்.


Tags : Coimbatore Metro ,Avinashi ,Finance Minister ,Palanivel Thiagarajan , Coimbatore Metro Rail, Report, Athikkadavu - Avinashi, Palanivel Thiagarajan
× RELATED ஒன்றிய பாஜக அரசு மாநிலங்களை...