×

பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடாவில் கண்காணிப்பை தீவிரப்படுத்த உச்சிப்புளி கடற்படை விமானத் தளத்தில் அதிநவீன ஹெலிகாப்டர்கள் ஒப்படைப்பு

ராமநாதபுரம்: கடற்கரை கண்காணிப்பை தீவிரப்படுத்த உச்சிப்புளி கடற்படை விமான தளத்திற்கு உள்நாட்டில் தயாரித்த 2 அதிநவீன ஹெலிகாப்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா கடற்பகுதிகளில் கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்த, ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி ஐஎன்எஸ் பருந்து கடற்படை விமான தளத்தில் நேற்று 2 அதிநவீன இலகுரக ஹெலிகாப்டர்கள் இணைக்கப்பட்டன. இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் 2 இலகு ரக ஹெலிகாப்டர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி வரவேற்கப்பட்டது.

ஹெலிகாப்டர்களை ஒப்படைத்து இந்திய கடற்படை கிழக்கு பிராந்திய தளபதி பிஸ்வாஜித் தாஸ்குப்தா பேசியதாவது: ஆபத்து காலங்களில் மருந்து பொருட்களை எடுத்து செல்லுதல், இயற்கை சீற்றம் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் உணவு பொருட்களை விநியோகித்தல், ஆபத்துகளில் சிக்கி தவிப்போரை மீட்பது உள்ளிட்ட பணிகளிலும் இந்த ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படும். கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் மாவட்ட நிர்வாகம் இந்த ஹெலிகாப்டர்களை உதவிக்கு அழைக்கலாம். 1984ல் நிறுவப்பட்ட உச்சிப்புளி கடற்படை பருந்து விமான தளம் அடுத்த 10 ஆண்டுகளில் 8 ஆயிரம் அடி ஓடுபாதையுடன் கூடிய விமான தளம் உள்ளிட்ட கட்டமைப்புகளுடன் விரிவாக்கம் செய்யப்படும். மிக முக்கியத்துவம் வாய்ந்த விமான தளமாக மேம்படுத்தப்படும். கடல்வழி கடத்தலை தடுப்பதிலும் மரைன் போலீஸ், மீன்வளம், வனம் உள்ளிட்ட துறைகளுடன் இணைந்து கடற்படை செயல்படும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் சங்கர்லால் குமாவத், எஸ்பி கார்த்திக், வன உயிரின காப்பாளர் பகான் ஜக்தீஷ் சுதாகர், உச்சிப்புளி ஐஎன்எஸ் பருந்து நிலைய கமாண்டிங் அலுவலர் விக்ராந்த் ஷப்னாஷ் மற்றும் கடற்படை விமான தள வீரர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Uchchipulli Naval Air Base ,Bagh Strait, Gulf of Mannar , State-of-the-art helicopters handed over at Uchchipulli Naval Air Base to intensify surveillance in Bagh Strait, Gulf of Mannar
× RELATED பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடாவில்...