கிராமசபை கூட்டங்களுக்கு ஒன்றிய குழு உறுப்பினர்களை அழைப்பதில்லை: பிடிஓவிடம் துணை தலைவர் புகார்

வாலாஜாபாத்: வாலாஜாபாத்தில் நடந்த, ஒன்றிய குழு கூட்டத்தில் ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களுக்கு ஒன்றிய குழு உறுப்பினர்களை அழைப்பதில்லை என பிடிஓவிடம் ஒன்றிய குழு துணை தலைவர் புகார் அளித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றிய குழு கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலகம் கூட்டரங்கில் நேற்று நடந்தது. ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன் தலைமை தாங்கினார், துணை தலைவர் சேகர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, அது குறித்து விவாதம் நடந்தது.

அதன் விவரம் வருமாறு: துணை தலைவர் சேகர்: ஊராட்சியில் நடக்கும் கிராம சபை கூட்டங்களுக்கு அந்தந்த அப்பகுதியை சேர்ந்த ஒன்றிய குழு உறுப்பினர்களை ஊராட்சி நிர்வாகம் அழைப்பதில்லை. இதற்கு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விளக்கம் அளிக்கவேண்டும்’ என்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜ்குமார்: உடனடியாக ஊராட்சி செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி, ஒன்றிய கவுன்சிலர்களை, சம்பந்தப்பட்ட ஊராட்சி கிராமசபை கூட்டம் உள்பட நிகழ்ச்சிகளுக்கு அழைக்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பி வைக்கிறேன்.

ஒன்றியக்குழு தலைவர் தேவேந்திரன்: ஊராட்சி செயலர்களை மட்டும் அழைத்து கூட்டம் நடத்தினால்போதாது, அடுத்த வாரத்தில் ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி செயலாளர்கள் மற்றும் அலுவலக அதிகாரிகளை வைத்து ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தினால், ஊராட்சிகளில் உள்ள பிரச்னைகள் குறித்து, அனைத்து அதிகாரிகளும் தெரிந்து கொள்ளும் வகையில் இருக்கும். அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். காலரா மஸ்தூர்களின் சம்பளம் குறித்து பேசும்போது, துணை தலைவர் சேகர் குறுக்கிட்டு, ‘காலரா மஸ்தூர்களின் பணிகள் என்ன, தினமும் எந்தெந்த ஊராட்சிகளில் பணியாற்றுகின்றனர் என்ற விவரங்களை அறிந்த பின், அவரது சம்பளம் குறித்து தீர்மானம் விரைவில் நிறைவேற்றப்படும்’ என்றார். கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜ்குமார், அமல்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: