கோயம்பேடு பூ மார்க்கெட்டில் பிளாஸ்டிக் பயன்படுத்திய 8 கடைகளுக்கு சீல் வைப்பு: கடை உரிமம் ரத்து; சி.எம்.டி.ஏ அதிகாரி அதிரடி

அண்ணாநகர்: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்த கூடாது என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அதேபோல் மஞ்சப்பை விற்பனை விற்பனை செய்ய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதற்கிடையில், கோயம்பேடு பூ, பழம், காய்கறி, உணவு தானியம் ஆகிய மார்க்கெட்டில் தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக கண்காணிக்கப்பட்டும் வருகிறது. பிளாஸ்டிக் உபயோகத்தை தடை செய்வது குறித்து அதிகாரிகள் பலமுறை ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட் முதன்மை நிர்வாக குழு அதிகாரி சாந்தி தலைமையில் அதிகாரிகள் நேற்று கோயம்பேடு பூ மார்க்கெட்டில் தீடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பிளாஸ்டிக் கவர்களில் பூக்களை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய 8 கடைகளை கண்டறிருந்து அந்த கடைகளை பூட்டி சி.எம்.டி.ஏ அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர். மேலும் 3 மாதங்களுக்கு இந்த 8 கடைகளும் செயல்பட தடை விதித்து, அதன் உரிமத்தை ரத்து செய்தனர்.

* நடவடிக்கை தொடரும்

கோயம்பேடு நிர்வாக முதன்மை அலுவலர் சாந்தி கூறியதாவது: கோயம்பேடு மார்க்கெட்டில் பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை செய்ய கூடாது என பலமுறை ஒலிப்பெருக்கி மூலமாக விழிப்புணர்வு செய்து வருகிறோம். அப்படி இருந்தும் அதிகாரிகளின் பேச்சை மீறி பூ மார்க்கெட்டில் பிளாஸ்டிக் கவர்களில் பூக்களை விற்பனை செய்த 8 கடைகளை சீல் வைத்து 3 மாதத்திற்கு கடை உரிமத்தை ரத்து செய்துள்ளோம். மேலும் தொடர்ந்து கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள காய்கறி, பூ, பழம் மார்க்கெட்டுகளில் பிளாஸ்டிக் பயன்பாடு இருக்கும் கடைகளை மூடி சீல் வைக்கப்படும், என தெரிவித்தார்.

Related Stories: