அஜித் நடித்த வலிமை படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தடைவிதிக்க ஐகோர்ட் மறுப்பு

சென்னை: நடிகர் அஜித் நடிப்பில் உருவான வலிமை திரைப்படத்தின் கதை, கதாபாத்திரங்கள், 2016ல் வெளியான தனது மெட்ரோ படத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளதாக ஜே.கே.கிரியேஷன்ஸ் நிறுவன உரிமையாளர் ஜெ.ஜெயகிருஷ்ணன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதற்கிடையே, வலிமை திரைப்படம் மார்ச் 25ம் தேதி ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளதால் அதற்கு தடை கோரி கூடுதல் மனுவும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, இயக்குனர் வினோத் தரப்பு பதில் மனுவை வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியம் தாக்கல் செய்தார்.

பதில் மனுவில், செய்தித்தாள்களில் அன்றாடம் வரும் சங்கிலி பறிப்பு, போதைப்பொருள் கடத்தல், கொலை போன்ற செய்திகளின் அடிப்படையில் உருவானதுதான் வலிமை படத்தின் கதை, கரு, கதாபாத்திரங்கள். மெட்ரோ படத்தின் கதை, கதாபாத்திரம் பயன்படுத்தப்பட்டதாக கூறுவது தவறு. பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட வலிமை படத்தை, ஓடிடி தளத்தில் வெளியிடவும், சாட்டிலைட் உரிமை தொடர்பாகவும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்நிலையில் தடை விதித்தால் பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே, தயாரிப்பாளர் ஜெயகிருஷ்ணன் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த பதில் மனுவை ஏற்ற நீதிபதி, வலிமை படத்தின் ஓ.டி.டி. வெளியீட்டிற்கு தடைவிதிக்க மறுத்து, பிரதான வழக்கின் விசாரணையை ஏப்ரல் 12ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Related Stories: