கனமழையால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்ய அவசியமில்லை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

புதுடெல்லி: ‘முல்லைப் பெரியாறு அணையில் கனமழையால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. எனவே அணையை ஆய்வு செய்ய வேண்டிய அவசியமில்லை’ என கேரள அரசுக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் கேரள அரசு தரப்பில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு,  பலம், அணையின் தன்மை  தொடர்பாக முழு அளவினான ஆய்வு நடத்தி பத்து ஆண்டுகள்  ஆகிவிட்டது. எனவே அணை தொடர்பான முழு அளவிலான ஆய்வு நடத்த காலம் நெருங்கி  விட்டதால் அதனை நடத்த வேண்டும். இதில் கேரளாவுக்கு  பாதுகாப்பும்,   தமிழகத்திற்கு தண்ணீர் என்பது தான் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள  அரசின்  நிலைபாடாக உள்ளது.

மேலும் கடந்த 2018ம் ஆண்டு முதல்  தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகளாக கேரள மாநிலம் கன மழையையும், பெரு  வெள்ளத்தையும் சந்தித்துள்ளது. குறிப்பாக இடுக்கி மாவட்டம் தான் பெரும்  பாதிப்புக்கு ஆளாகியுள்ளது. எனவே தான் முல்லை பெரியாறு அணையின்   பாதுக்காப்பு குறித்து அச்சம் உள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்ட நில  அதிர்வுகள், நில நடுக்கங்கள் முல்லை பெரியாறு அணை அமைந்திருக்கும்  பகுதிகளில் பதிவாகியுள்ளது. அதனை தாங்கும்  சக்தி அணைக்கு இல்லை’ என  தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஏ.எம்.கன்வீல்கர் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘‘முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை செய்ய விடாமல் கேரள அரசு வேண்டுமென்றே தடுக்கிறது. வெள்ளப்பெருக்கு, கனமழை காரணமாக அணைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அணையானது இயற்கை பேரிடர்களை தாங்கும் அளவுக்கு பலமாகவும் ,  பாதுகாப்பாகவும் உள்ளது. முல்லைப் பெரியாறு அணையை முழு அளவிலான ஆய்வுக்கு உட்படுத்த தயார் என்றும், ஆனால் அதற்கு முன்னதாக  அணையை பலப்படுத்தும் பணியை முடிக்க கேரளா அரசு ஒத்துழைக்க வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதிகள், ‘‘முல்லைப் பெரியாறு அணை விவகாரம்  இரண்டு மாநிலங்களுக்கு இடையிலான பிரச்னையாக மட்டும் பார்க்க முடியாது. அது நாட்டின் குடிமக்களின் பிரச்னையாகவும், ஒரு குடிமகன் ஆபத்தில் இருந்தாலும் அது தொடர்பாக தீர விசாரிக்க வேண்டும்’’ என தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தனர்.

Related Stories: