×

2வது மாதத்தில் அடி வைத்தது உக்ரைன் போர் நாசமாகும் முக்கிய நகரங்கள்: ரஷ்யா மீது புதிய தடைகளை விதிப்பது பற்றி நேட்டோ நாடுகளுடன் பைடன் ஆலோசனை

கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போர் இன்றுடன் 2வது மாதத்தில் அடியெடுத்து வைக்கிறது. போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று ஆவேசத்தில் ரஷ்ய படைகள் நடத்தி வரும் தீவிர தாக்குதலில், உக்ரைனின் பல முக்கிய நகரங்கள் நாசமாகி, மயானங்களாக காட்சி அளிக்கின்றன. நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது கடந்த மாதம் 24ம் தேதி ரஷ்யா போர் தொடுக்க தொடங்கியது. 1.50 லட்சத்திற்கு அதிகமான வீரர்கள், டாங்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்ற தாக்குதல் நடத்தப்பட்டது. முதலில் உக்ரைனின் ராணுவ தளங்களின் மீது மட்டுமே தாக்குதல் நடத்துவோம் என்று சொன்ன ரஷ்ய ராணுவம், நாட்கள் செல்ல செல்ல அரசு அலுவலகங்கள், டிவி ஸ்டேஷன், மருத்துவமனை, பள்ளிக் கூடங்கள் மற்றும் பொதுமக்கள் செல்லும் பொது இடங்களில் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்த தொடங்கியது.

உக்ரைன் ராணுவத்தின் கடும் பதிலடி காரணமாக, தரை வழியாக பெரும் முன்னேற்றம் அடைய முடியாமல் ரஷ்ய படை திணறி வருகிறது. இதனால், வான்வழி தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளன. குறிப்பாக, கடந்த சில நாட்களாக ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் சரமாரி தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால், அப்பாவி மக்கள் கொத்துக் கொத்தாக சாலையிலேயே செத்து மடிகின்றனர்.  கட்டிடங்கள் சல்லடையாகி காட்சி அளிக்கின்றன. உக்ரைன் தலைநகர் கீவ், 2வது பெரிய நகரமான கார்கிவ், மரியுபோல் உள்ளிட்ட நகரங்களை கைப்பற்ற ரஷ்ய படைகள் போராடி வருகின்றன. ஆனால், உக்ரைன் படைகளின் பதிலடியால் ரஷ்யாவின் இந்த முயற்சி பலிக்கவில்லை. இதனால், ரஷ்ய படைகள் அதிநவீன, ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் சீறிப்பாய்ந்து இலக்குகளை தகர்க்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை அதிகளவில் வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்ய படைகள் கைப்பற்றிய கார்கிவை உக்ரைன் படைகள் மீண்டும் மீட்டுள்ளன.

ஒரு சில நாட்களில் போரை முடிவுக்கு கொண்டு வந்து விடலாம் என கருதிய ரஷ்ய அதிபர் புடினின் எண்ணம், ஒரு மாதமாகியும் ஈடேறவில்லை. இருதரப்பினருக்கும் இடையே நடக்கும் போரில் ஏராளமான வீரர்கள் பலியாகி உள்ளனர். ராணுவ தளவாடங்கள் அழிக்கப்பட்டுள்ளன. போர் நடக்கும் முக்கிய நகரங்களில் தவிக்கும் மக்கள், பாதுகாப்பாக வெளியேற்றப்படுவதற்காக அமைககப்பட்டுள்ள மனிதநேய பாதைகள் மீதும் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்துகின்றன. இதில், அப்பாவி மக்கள் கொல்லப்படுகின்றனர். இது தொடர்பாக ரஷ்யாவும், உக்ரைனும் பரஸ்பர குற்றச்சாட்டை கூறி வருகின்றன.

இந்நிலையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர், இன்று 2வது மாதத்தில் அடி எடுத்து வைக்கிறது. நேற்றும் உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட நகரங்களின் மீது ரஷ்ய படைகள் கடும் தாக்குதல் நடத்தின. கருங்கடலில் இருந்து போர்க்கப்பல்கள் மூலமும் ஏவுகணைகள் வீசப்பட்டன. இடைவிடாமல் கேட்டு குண்டு சத்தத்தால் மக்கள் செத்து பிழைத்து வருகின்றனர். ஏராளமான மக்கள் தொடர்ந்து பதுங்கி குழியில் தங்கி உள்ளனர். இந்நிலையில், மேற்கு பகுதியில் நேற்று ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலால், அப்பகுதியை கரும்பு புகைகளால் சூழ்ந்து காணப்பட்டது. வணிக வளாகம், கட்டிடங்கள் தகர்க்கப்பட்டன. இதில், 4 பேர் காயமடைந்தனர். குறிப்பாக, அசோவ் கடலில் உள்ள ரஷ்ய போர்கப்பல்களில் இருந்து மரியுபோல் மீதான தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.  

ரஷ்ய படைகளால் சுற்றி வளைக்கப்பட்ட வடக்கு நகரமான செர்னிஹிவில் டெஸ்னா  ஆற்றைக் கடந்து கீவ்வை நகரத்தை இணைக்கும் பாலத்தையும் குண்டுவீசி தகர்த்து  உள்ளனர். மனிதாபிமான உதவிகள் மற்றும் பொதுமக்களின் வெளியேற்றம் ஆகியவை  அந்தப் பாலத்தின் வழியாக நடந்தது. இங்கு உணவு, தண்ணீர், மின்சாரம் உள்ளிட்ட  அடிப்படை வசதிகள் ஏதுவும் இல்லை. இதனால், பேரழிவு ஏற்படும் என உள்ளூர்  அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்த சூழலில் இந்த வாரம் பிரசல்ஸ், வார்சாவில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், நேட்டோ நாடுகளின் தலைவர்களும் சந்தித்து பேச உள்ளனர். இந்த ஆலோசனையின்போது, ரஷ்யா மீது புதிய பொருளாதார தடைகளை விதிப்பது பற்றி முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

* உயிருக்கு அஞ்சாத இந்திய பெண்கள்
மிசோரம் மாநிலம், சிஹ்பிர் கிராமத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரிகள் ரோஸ்லா நுதாங்கி (65) மற்றும் ஐஸ்வாலின் எலக்ட்ரிக் வெங் பகுதியைச் சேர்ந்த ஆன் ப்ரிடா (48) மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த மூன்று சகோதரிகள், போர் நடந்து வரும் கீவ் நகரில் உள்ள வீடற்ற 37 உக்ரைனியர்களையும், கேரளாவைச் சேர்ந்த ஒரு மாணவியையும் அங்குள்ள ஒரு குடோனில் தங்க வைத்து பாதுகாத்து வருகின்றனர். தற்போது, உணவின்றி தவித்து வரும் நிலையில் அவர்களை விட்டு வெளியேற கன்னியாஸ்திரிகள் மறுத்து உள்ளனர். இதுகுறித்து ரோஸ்லா நுதாங்கி உறவினர் சில்வின் கூறுகையில், ‘நான் ரோஸ்லாவிடம் தொலைபேசியில் பேசினேன். அப்போது அவர், நாங்கள் நன்றாக இருக்கிறோம். எங்களிடம் சாப்பிட உணவு இருக்கிறது. முன்பே பதுக்கியதால் பிரச்னை இல்லை. எங்களால் வெளியில் செல்ல முடியாது. இப்போது ஒரு குடோனில் ஒளிந்து இருக்கிறோம்’ என்று சகோதரி ரோஸ்லா கூறியதாக சில்வின் கூறினார்.

* போலந்தில் 45 ரஷ்ய உளவு அதிகாரிகள்
தனது நாட்டில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் 45 ரஷ்ய உளவுத்துறை அதிகாரிகள் இருப்பதாக போலந்து அரசு அடையாளம் கண்டு உள்ளது. தூதரக அந்தஸ்தை பயன்படுத்து தங்கியுள்ள இவர்களை நாட்டை விட்டு வெளியேற்றும் நடவடிக்கையை அது தொடங்கியுள்ளது.



Tags : Ukraine ,Biden ,NATO ,Russia , Key cities hit by 2nd month Ukraine war-torn major cities: Biden consults with NATO on imposing new sanctions on Russia
× RELATED உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத்...