×

முழு கொள்ளளவில் வைகை அணை மதுரை சித்திரை திருவிழாவுக்கு வைகை ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும்: பொதுப்பணித் துறை அதிகாரிகள் தகவல்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் நீர்மட்டம் முழு கொள்ளளவில் உள்ளது. இதனால் இந்தாண்டு மதுரை சித்திரை திருவிழாவுக்கு, அணையில் இருந்து வைகை ஆற்றுக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத போதும், தொடர்ந்து 5 மாதங்களாக முழு கொள்ளளவில் இருக்கிறது. தற்போது வைகை அணையில் 69 அடிக்கும் மேலாக தண்ணீர் உள்ளது.

சித்திரை மாதத்தில் மதுரையில் நடைபெறும் திருவிழாவின் போது, வைகை அணையில் இருப்பை பொறுத்து, வைகை ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். அணையில் தண்ணீர் குறைவாக இருந்தால், மதுரை சித்திரை திருவிழாவுக்கு தண்ணீர் திறக்கப்படுவதில்லை. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தாக்கம் காரணமாக மதுரையில் சித்திரை திருவிழா பெரிய அளவில் கொண்டாடப்படவில்லை. இந்தாண்டு சித்திரை திருவிழா, அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்குகிறது. இதில் உலக பிரசித்தி பெற்ற வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி ஏப்ரல் 16ம் தேதி நடைபெறுகிறது.

இந்த விழாவில் லட்சக்கணக்காண பக்தர்கள் பங்கேற்பார்கள். வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சிக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். இந்தாண்டு வைகை அணையின் நீர்மட்டம், தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளதால் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழாவிற்காக அணையில் இருந்து கண்டிப்பாக தண்ணீர் திறக்கப்படும் என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எவ்வளவு தண்ணீர் திறக்க வேண்டும் என்பது குறித்து, அரசுக்கு பொதுப்பணித்துறை சார்பில் அனுமதி கேட்டு கடிதம் அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அனுமதி வழங்கியதும் திருவிழா நேரத்தில் தண்ணீர் திறக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Vigai river ,Vigai Dam Madurai App Festival ,Public Works Officials , vaigai dam, madurai
× RELATED பாரம்பரிய கட்டிடங்களை பார்வையிட...