×

பெட்ரோல், காஸ் விலை உயர்வு பெண்கள் மீது மோடி வைத்துள்ள அக்கறையை காட்டுகிறது: ஈரோட்டில் முத்தரசன் பேட்டி

ஈரோடு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், ஈரோட்டில்  நிருபர்களுக்கு அளித்த பேட்டி: முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சியினரையும் அரவணைத்து செல்லும் போக்கை கடைபிடித்து வருவது வரவேற்புக்குரியது. கர்நாடக மாநிலம், மேகதாதுவில் அணை கட்டுவதற்கான தீர்மானத்தை கர்நாடக அரசு நிறைவேற்றி அதற்காக ஆயிரம் கோடி நிதியும் ஒதுக்கியுள்ளது. அரசியல் ஆதாயத்துக்காக நீதிமன்ற உத்தரவுகளை மீறி அம்மாநிலம் செயல்படுகிறது. ஒன்றிய அரசு, இந்த பிரச்னையில் நடுநிலைமையுடன் செயல்பட வேண்டும். பாசிச பாஜவின் மக்கள் விரோத போக்கை கண்டித்து மார்ச் 28, 29ம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடைபெற உள்ளது.

இங்கு ஆளும் திமுக அரசு, மக்கள் நலனை முன்வைத்து செயல்பட்டாலும், ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை இங்கும் அமல்படுத்த தொழிலாளர் துறையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை தடுக்க நம் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீட் தேர்வுக்கு விலக்கு குறித்து தற்போது மீண்டும் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதை உடனடியாக ஒன்றிய அரசுக்கு அனுப்ப ஆளுனர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஜ தலைவர் அண்ணாமலை கூறிய புகாருக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர் உரிய பதிலளித்துள்ளார். இருவரும் பாஜவினர் என்பதால் ஆச்சரியம் எதுவும் இல்லை. அண்ணாமலை ஒரு விளம்பரப் பிரியர். தினமும் தன்னை பற்றி செய்தி வரவேண்டும் என்பதில் முனைப்பு காட்டுகிறார். அதில் அவ்வளவுதான் விஷயம்.

5 மாநில தேர்தல் முடிந்தவுடன் பெட்ரோல், டீசல் விலை எதிர்பார்த்தது போலவே உயர்ந்துள்ளது. பெண்கள் மீது அக்கறை கொண்டவர் என கூறப்படும் பிரதமர் மோடியால்தான், தற்போது காஸ் விலை ரூ.50 வரை உயர்த்தப்பட்டு பெண்களை அவதியடைய செய்துள்ளார். இது மோடி பெண்கள் மீது வைத்துள்ள அக்கறையை காட்டுகிறது. இந்த விலை உயர்வு அனைத்து பொருள்களின் விலையும் உயர காரணமாக அமையும். இது மக்களை மேலும் சிரமப்படுத்தும்.

Tags : Kass ,Modi ,Mutharasan , Petrol, Gas Prices, Rise, Mutharasan
× RELATED கச்சத்தீவு பற்றி 10 ஆண்டாக வாய்...