×

கமுதி முத்துமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா: உடல் முழுவதும் சேறு பூசி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்

கமுதி: ராமநாதபுரம் மாவட்டம்,கமுதி முத்துமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழாவில்,பக்தர்கள் உடல் முழுவதும் சேறுபூசி நேர்த்திக்கடன் செலுத்தினர்.கமுதி க்ஷத்திரிய நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்டமுத்துமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழாகடந்த 9-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, குதிரை,யானை,காமதேனு, ரிஷபம்,போன்ற பல்வேறு வாகனங்களில் அம்மன் நகர் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. தினமும் பொதுமக்களுக்கு சுண்டல் மற்றும் பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது.ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர்.

திருவிழாவின் முக்கிய நாளான நேற்று கோவிலின் முன்பு ஏராளமான பொதுமக்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.பின்னர் மாவிளக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று நள்ளிரவு முதல்
ஏராளமான பக்தர்கள் கோவிலில் உருண்டு கொடுக்கும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று,அதிகாலையில் இருந்து பக்தர்கள் பலர் தங்களது உடல் முழுவதும் சேறு பூசிக் கொண்டு,கையில் வேப்பிலையுடன்
கோவிலை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.தமிழகத்தில் வேறு எங்கும் இந்த நேர்த்திக் கடன் இல்லை என்றும், இதனை செய்வதன் மூலம் உடலில் உள்ள சரும நோய்கள் குணமாகும் என்று பக்தர்கள் கூறுகின்றனர்.

ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் 1000க்கும் மேற்பட்டோர் இந்த நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் ஏராளமானோர் அக்கினிச்சட்டி, பூப்பெட்டி பால்குடம் , 101 சட்டி, 51 சட்டி, நாக்கில் வேல் குத்துதல் என தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தினர். நூற்றுக்கணக்கானோர் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தினர். சென்னை,காரைக்குடி, என தமிழகத்தில் பல்வேறு பகுதியில் இருந்து இத்திருவிழாவை காண வந்துள்ளனர். தினமும் இரவு முத்துமாரியம்மன் கோவில் திடல் முன்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை க்ஷத்திரிய நாடார் உறவின் முறையார் செய்து வருகின்றனர்.

Tags : Kamudi Muthumaryamman Temple ,Panguni Pongal Festival , Kamuthuthumariamman Temple Maruth Pongal Festival: The mud throughout the body paid the devotees elegant
× RELATED பக்தர்களின் ‘ஆகோ அய்யாகோ’ கோஷம்...