26ம்தேதி முதல் போட்டியில் சிஎஸ்கே-கேகேஆர் மோதல் ஐபிஎல் டிக்கெட் விற்பனை எப்போது?: எதிர்பார்ப்பில் காத்திருக்கும் ரசிகர்கள்

மும்பை: 15வது ஐபிஎல் டி.20 தொடர் வரும் 26ம்தேதி தொடங்குகிறது. இதில் புதிதாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் இணைந்துள்ளது. இதனால் அணிகளின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மும்பையில் 3 மைதானங்கள் மற்றும் புனே ஆகிய இடங்களில் மட்டும் லீக் போட்டி நடக்கிறது. மும்பையில் 55, புனேவில் 15 என மொத்தம் 70 லீக்போட்டி நடைபெற உள்ளது. பிளே ஆப் சுற்றுப்போட்டிகளுக்கான இடம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. அகமதாபாத் அல்லது பெங்களூருவில் பிளே ஆப் போட்டி நடைபெறும் என தெரிகிறது.  

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மைதானத்தில் 25 சதவீதம் மட்டுமே ரசிகர்களுக்கு மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. இதில், மும்பை கிரிக்கெட் சங்கம், மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் (எம்சிஏ), ஸ்பான்சர்கள்,  அணிகள் மற்றும் காவல்துறை, தீயணைப்புதுறை உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு டிக்கெட்டுகளை பிசிசிஐ வழங்க வேண்டும் என்பதால் 25 சதவீதத்தில் 10 சதவீதம் மட்டுமே ரசிகர்களுக்கு வழங்க முடியும், தற்போது கொரோனா தாக்கம் குறைவாக உள்ளதால் ரசிகர்களுக்கான அனுமதியை 40 சதவீதமாக உயர்த்த பிசிசிஐ முயற்சி மேற்கொண்டுள்ளது. ஆனால் சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளில் கொரோனா மீண்டும் வேகமாக பரவி வருவதால் மாநில அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை.

வரும் 26ம் தேதி வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டிக்கு இன்னும் 3 நாட்களே உள்ளநிலையில் டிக்கெட் விற்பனை குறித்து எந்த தகவலும் வெளியாகாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். வழக்கமாக, டிக்கெட் விற்பனை இரண்டு வாரங்களுக்கு முன்பே தொடங்கி விடும் நிலையில் இந்தமுறை எவ்வளவுரசிகர்களுக்கு அனுமதி என்பதில் விவாதம் நடைபெறுவதால் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே டிக்கெட் விலை, ஸ்டேடியத்தில் எவ்வளவு ரசிகர்களுக்கு அனுமதி என்பது குறித்து இன்று முடிவு எடுக்கப்படுகிறது. தொடர்ந்து இன்று இரவு அல்லது நாளை முதல் இணைய தளங்களில் டிக்கெட் விற்பனை தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது. முதல் ஒருவாரத்திற்கான டிக்கெட் மட்டும் விற்பனை செய்யப்படும் எனவும், பின்னர் ரசிகர்களுக்கான அனுமதியின் அளவை பொறுத்து அடுத்த வாரத்திற்கான டிக்கெட் விற்பனை முடிவு செய்யப்படும் என பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.  முதல்போட்டி நடைபெறும் வான்கடே ஸ்டேடியம் 33 ஆயிரம் ரசிகர்கள் கொள்ளளவு கொண்டது. இதில் 9800 முதல் 10ஆயிரம் பேர் வரை அனுமதிக்கப்படுவார்கள்.

Related Stories: