பேராவூரணி அருகே இரண்டரை ஆண்டுகளில் பாளை விட்ட தென்னை-பொதுமக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்

பேராவூரணி : பேராவூரணி அருகே, நடவு செய்யப்பட்ட இரண்டரை ஆண்டுகளில், பாளை விட்டுள்ள தென்னங்கன்றை பொதுமக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.

பேராவூரணி அருகே உள்ள காலகம் ஊராட்சியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் ( 57), விவசாயி. இவர் தனக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் பயிரிட்டிருந்த, ஒரு தென்னங்கன்று, இரண்டரை ஆண்டுகளில் பாளை விட்டுள்ளது.

பொதுவாக வீரிய ஒட்டுரக தென்னை 5 ஆண்டுகளில் காய்க்க தொடங்கும், இந்த தென்னை இரண்டரை ஆண்டுகளில் பாளை விட்டுள்ளது விவசாயிகளை ஆச்சர்யமடையவைத்துள்ளது. இது குறித்து விவசாயி சுப்பிரமணியன் கூறியது, இப்பகுதியில் குட்டை, நெட்டை, ஒட்டு ரகம் என பல்வேறு வகையான தென்னங்கன்றுகள் பயிரிடப்படுகின்றன. குட்டை ரகம் 8 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. நெட்டை ரகம் 20 மீட்டர் வரை உயரம் வளரக்கூடியது.

5 ஆண்டுகளில் காய்க்க தொடங்கி 60 முதல் 80 ஆண்டுகள் வரை இவ்வகை மரங்கள் பலன் தரும்.ஒட்டு ரகம் 10 முதல் 14 மீட்டர் வரை வளரக்கூடியது. 4 ஆண்டுகளில் காய்க்க தொடங்கி 40 ஆண்டுகள் வரை பலன் தரும். தற்போது நடப்பட்டுள்ளது நாட்டு ரகம் தென்னங்கன்று ஆகும்.இந்த ரகம் சாதாரணமாக 5 முதல் 6 ஆண்டுகளில் காய்க்க தொடங்கும். எனது தோப்பில் உள்ள நெட்டை ரக நாட்டுத் தென்னை மரத்திலிருந்து விதையெடுத்து இந்த தென்னங்கன்று உற்பத்தி செய்யப்பட்டு நடவு செய்யப்பட்டது. சாதாரணமாக 5 ஆண்டுகளில் பாளை விட்டு பூத்து காய்க்க தொடங்கும். தற்போது சிறு கன்றாக இருக்கும் போதே இரண்டரை ஆண்டுகளில் காய்க்க தொடங்கி உள்ளது அதிசயமாக உள்ளது. என்றார்.

இதுகுறித்து வேளாண் துறை அலுவலர் நவீன் சேவியர் கூறுகையில், மரபணு மாற்றத்தின் காரணமாக இந்த நாட்டு தென்னை மரம் விரைவில் பாளை விடத் தொடங்கியிருக்கலாம்.

லட்சத்தில் ஒருவர் குட்டையாக பிறப்பது போல, 7, 8 வயதில் பெண் குழந்தைகள் சிலர் பூப்பெய்வது போல, இது ஒரு மரபணு குறைபாடாக இருக்கும். அருகிலேயே குட்டை ரகம், நெட்டை ரகம், குட்டை-நெட்டை ரகம் பயிரிடப்படும் நிலையில், மகரந்தச் சேர்க்கை மூலம் இதுபோல நடந்திருக்கலாம். இந்த பாளை காய் பிடிக்காமல் போகலாம். நிரந்தர பலன் தர வாய்ப்பில்லை.

பருவநிலை மாற்றம் காரணமாக உயிர் சார்ந்த அமைப்புகளில் இவ்வாறு மாற்றம் நிகழலாம் என்றார்.

Related Stories: