×

கோடை சீசன் துவங்கும் நிலையில் ஊட்டியில் ஆதாம் நீரூற்று சீரமைக்கும் பணி தீவிரம்

ஊட்டி : கோடை சீசன் துவங்கும் நிலையில் ஊட்டி நகரின் மையப்பகுதியில் உள்ள பழமை வாய்ந்த ஆதாம் நீரூற்று சீரமைக்கும் பணிகளை நகராட்சி நிர்வாகம் துவக்கி உள்ளது.
நீலகிரி மாவட்டத்திற்கு தினமும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இருப்பினும், கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். சமவெளிப் பகுதிகளில் இந்த இரு மாதங்களில் வெயில் வாட்டும் நிலையில், குளு குளு சீசனை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டி வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு இவ்விரு மாதங்களும் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக, தோட்டக்கலைத்துறை மற்றும் சுற்றுலாத்துறை மூலம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மேலும், ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில், தோட்டக்கலைத்துறை மற்றும் சுற்றுலாத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்கள் புதுப்பிக்கப்படும். அதேபோல், நகராட்சி நிர்வாகம் சார்பில் ஊட்டி நகர் அழகுப்படுத்தப்படும்.

கோடை சீசன் துவங்க ஓரிரு நாட்களே உள்ள நிலையில், தற்போது ஊட்டி நகரை பொலிவுப்படுத்தும் பணியில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. ஊட்டி மார்க்கெட் சுவர்கள் சீரமைக்கப்பட்டு வர்ணம் பூசும் பணிகளை மேற்கொள்ள ஆயுத்தமாகி வருகிறது. இந்நிலையில், ஊட்டி நகரின் மையப்பகுதியில் உள்ள பழமை வாய்ந்த ஆதாம் நீருற்று உள்ளது. இந்த நீரூற்று அருகே நின்று சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்துச் செல்வது வழக்கம்.

கோடை சீசன் துவங்கும் நிலையில், தற்போது ஆதாம் நீரூற்று சீரமைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன.நீருற்றில் தற்போது வர்ணம் பூசும் பணிகள் நடந்து வருகின்றன. மேலும், நீருற்றை சுற்றியுள்ள பூங்கா மற்றும் குளத்தை சீரமைக்கும் பணிகளும் துவக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் மாதம் முதல் இரவு நேரங்களில் இந்த நீருற்றில் தண்ணீர் விழும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags : Adam Fountain ,Ooty , Ooty: With the onset of summer season, the municipal administration is renovating the ancient Adam Fountain in the heart of Ooty.
× RELATED கோடை சீசனை முன்னிட்டு...