×

கல்லட்டி மலைப்பாதையில் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி தீவிரம்

ஊட்டி : கல்லட்டி மலைப்பாதையில் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு இறுதியில் மழை பெய்த நிலையில், கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக நிலவிய உறைப்பனி பொழிவு, வெயில் காரணமாக வனங்கள் பசுமை இழந்து காட்சியளிக்கிறது. குறிப்பாக, முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் வறட்சியின் தாக்கம் அதிகமாக உள்ளது. வனப்பகுதி முழுவதுமாக காய்ந்த நிலையில் காணப்படுவதுடன், நீர் நிலைகளும் தண்ணீர் இன்றி காணப்படுகின்றன. செடி, கொடிகளும், புற்களும் காய்ந்து எளிதில் தீப்பற்றும் நிலையில் உள்ளன. காட்டுத்தீ ஏற்பட்டால் வனப்பகுதி எரிந்து நாசமாக வாய்ப்பு உள்ளது.

எனவே, காட்டுத்தீ ஏற்படாமல் தவிர்க்கும் வகையில் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.ஊட்டியில் இருந்து மசினகுடி செல்லும் கல்லட்டி மலைப்பாதையில் தற்போது வாகன போக்குவரத்து அதிகமாக உள்ள நிலையில், கல்லட்டி வனத்துறை சோதனைச் சாவடி முதல் மாவனல்லா வரை சாலையின் இருபுறமும் உள்ள முட்புதர்களை வெட்டி அகற்றி தீத்தடுப்பு கோடுகளை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளில் வேட்டை தடுப்பு காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கல்லட்டி மலைப்பாதையில் வாகனத்தில் செல்பவர்கள் புகைப்பிடித்து விட்டு சிகரெட் போன்றவற்றை சாலை ஓரத்தில் வீசினால் அதன் மூலம் காட்டுத்தீ ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என வனத்துறை கேட்டு கொண்டுள்ளது.



Tags : Kallatti hill , Ooty: Work is underway to set up fire protection lines on the Kallatti hill road. Last year in the Nilgiris district
× RELATED விபத்துக்களை தவிர்க்க கல்லட்டி...