கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த பெட்ரோல் பங்க்குகளில் பாதுகாப்புக்கு ராணுவம்: இலங்கையில் அவலம்

கொழும்பு: இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பெட்ரோல் வாங்குவதற்கு ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையில் காத்துக்கிடக்கின்றனர். இதனையொட்டி பங்க்குகளில் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகின்றது. அந்நிய செலாவணி பற்றாக்குறை காரணமாக இந்த மோசமான நிலையை இலங்கை எதிர்கொண்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது. திடீர் விலை உயர்வு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை உள்ளிட்டவற்றால் பொதுமக்கள் பெட்ரோல் பங்க்குகள் முன் வரிசையில் காத்துகிடக்கின்றனர்.

பல ஆயிரணக்கனக்கான மக்கள் பல மணி நேரங்களாக காத்து நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சனியன்று  கொளுத்தும் வெயிலில் சுமார் 6 மணி நேரம் வரிசையில் நின்ற நிலையில் 3 முதியவர்கள் உட்பட 4 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து அரசு பெட்ரோல் பங்குகளில் கூட்ட நெரிசலால் அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  குறிப்பாக ஒரு வாரமாக நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்து கிடக்கும் பங்க்குகளில் அவர்கள் பாதுகாப்பு பணியில் இருக்கின்றனர்.  இதன் மூலம் பொதுமக்களுக்கு நியாயமான முறையில் எரிபொருள் விநியோகம் செய்வதை ராணுவ வீரர்கள் உறுதி செய்கின்றனர்.

Related Stories: