×

போரில் முன்னேற முடியாமல் ரஷ்ய படை திணறல் கீவ் புறநகரை மீட்டது உக்ரைன்: மரியுபோலில் பயங்கர தாக்குதல் தொடர்கிறது

கீவ்: உக்ரைன் போரில் தொடர்ந்து வேகமாக முன்னேற முடியாமல் ரஷ்ய படை திணறுகிறது. பலமான எதிர் தாக்குதல் நடத்தி வரும் உக்ரைன் ராணுவம், தலைநகர் கீவ்வின் புறநகரை ரஷ்யாவிடமிருந்து மீட்டுள்ளது. ஆனாலும் மரியுபோல் நகரில் தொடர்ந்து கொலைவெறி தாக்குதல் தொடர்ந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதை எதிர்த்து ரஷ்ய ராணுவம் நடத்தி வரும் போர் 27வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. ஆரம்பத்தில் வேகமாக முன்னேறிய ரஷ்ய ராணுவம் தற்போது பல இடங்களில் முடங்கி உள்ளது. கெர்சன் நகரை கைப்பற்றிய பிறகு தலைநகர் கீவ், கார்கிவ் ஆகிய 2 பெரிய நகரங்களை குறிவைத்து ரஷ்ய படைகள் முன்னேறின. ஆனால் தற்போது 2 இடங்களிலும் ரஷ்ய ராணுவம் திணறி வருகிறது. குறிப்பாக, தலைநகர் கீவ்வின் புறநகர்களில் ஒன்றான மக்காரிவிலிருந்து ரஷ்ய படைகள் வெளியேற்றப்பட்டுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் நேற்று தகவல் வெளியிட்டது.

நேற்று அதிகாலை பயங்கரமான எதிர் தாக்கதல் மூலமாக அப்பகுதியில் இருந்த ரஷ்ய படைகள் விரட்டி அடிக்கப்பட்டிருப்பதாகவும், மக்காரிவ் முழுமையாக உக்ரைன் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் வடமேற்கில் இருந்து கீவ்வை சுற்றியுள்ள ரஷ்ய படைகள் தலைநகருக்குள் நுழைவதை உக்ரைனால் தடுக்க முடியும். ஆனாலும், புச்சா, ஹோஸ்டோமெல் மற்றும் இர்பின் ஆகிய பிற புறநகர்களில் ரஷ்யா தொடர்ந்து தரைவழியாக சண்டையிட்டு வருகிறது. ரஷ்ய ராணுவம் பல இடங்களில் முடங்கி இருப்பதாகவும், அதன் செயல்பாடுகள் வேகமிழந்துள்ளதாகவும் இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சக உளவுத்தகவல்களும் கூறுகின்றன.

இதன் காரணமாக, ரஷ்யா தற்போது தரைவழி தாக்குதலுக்கு பதிலாக அதிகளவில் வான் தாக்குதலை நடத்தி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 300க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் உக்ரைன் மீது ரஷ்யா ஏவி  இருப்பதாகவும், படையெடுப்பு தொடங்கியதில் இருந்து தற்போது வரை 1,100 ஏவுகணைகள் ஏவப்பட்டிருப்பதாகவும் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் கூறி உள்ளனர். அடுத்த சில நாட்களில் அமெரிக்க அதிபர் பைடன் போலந்துக்கு வர உள்ளார். அங்கு நேட்டோ நாடுகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதால், அடுத்த சில நாட்களில் ரஷ்ய ராணுவம் தனது தாக்குதலை தீவிரப்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது.அதே சமயம், மரியுபோல் நகரில் தொடர்ந்து ரஷ்யாவின் கொலைவெறி தாக்குதல் நடந்து கொண்டிருந்தது. அங்கு பெரும்பாலான குடியிருப்பு கட்டிடங்கள் குண்டுவீசி தகர்க்கப்பட்டுள்ளதாகவும், சாலையில், தெருக்களில் மக்கள் சடலங்களாக கிடப்பதாகவும் தப்பி வந்தவர்கள் கண்ணீர் மல்க கூறி வருகின்றனர்.

ஐநா அவசர கூட்டம் இன்று கூடுகிறது
அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளின் கோரிக்கையைத் தொடர்ந்து உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐநா பொதுச் சபையில் இன்று அவசர கூட்டம் மீண்டும் நடக்க உள்ளது. ஏற்கனவே ரஷ்யாவுக்கு ஐநா பல்வேறு கண்டனம் தெரிவித்துள்ளது. இன்றைய கூட்டத்திலும், ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானங்கள் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

35 லட்சம் பேர் அகதிகள்
ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிற்குப் பிறகு உக்ரைனில் இருந்து 35 லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளதாக ஐநா அகதிகள் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. இது 2ம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவின் மிக மோசமான அகதிகள் நெருக்கடிக்கு வழிவகுத்த வெளியேற்றத்தில் மற்றொரு மைல்கல்லைத் கடந்துள்ளது.

உக்ரைன் அகதிகளுக்காக நோபல் பதக்கத்தை விற்கும் ரஷ்ய பத்திரிகையாளர்
உக்ரைன் போரை பெரும்பாலான ரஷ்ய மக்கள் விரும்பவில்லை. இந்த விவகாரத்தில் அதிபர் புடினுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களும் அந்நாட்டில் நடக்கின்றன. இந்நிலையில், உக்ரைன் அகதிகளுக்கு நிதி திரட்டுவதற்காக கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வென்ற ரஷ்ய பத்திரிகையாளர்  டிமிட்ரி முராடோவ் தனது பதக்கத்தை ஏலம் விட இருப்பதாக தெரிவித்துள்ளார். இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஏல நிறுவனங்களிடம் அவர் பேசி வருகிறார். கடந்த ஆண்டு நோபல் பரிசு பெற்றதும் அதற்கான பரிசுத் தொகையை, மாஸ்கோ நல்வாழ்வு மையம், முதுகுத்தண்டில் பிரச்சனை உள்ள குழந்தைகளைப் பராமரித்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக முராடோவ் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்தியா நடுங்குகிறது: ஜோ பைடன் கிண்டல்
வாஷிங்டனில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ‘‘ரஷ்ய அதிபர் புடினுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுப்பதில் குவாட் அமைப்பில் உள்ள ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் மிகவும் உறுதியாக உள்ளன. ஆனால், ரஷ்யாமீது பொருளாதாரத் தடைகள் விதிக்கவும், புடினை எதிர்கொள்வதிலும் இந்தியா மட்டும் சற்று நடுங்குகிறது. நேட்டோவைப் பிளவுபடுத்த முடியும் என்று புடின் எண்ணிக்கொண்டிருந்தார்.

ஆனால், நேட்டோ ஒற்றுமையாக இருக்கும் என்று அவர் நினைக்கவில்லை’’ என்றார். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடை விதித்த போதிலும், ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்குகிறது. இதற்கு ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதே சமயம், ரஷ்யா மீது இந்தியா எந்த பொருளாதார தடையும் விதிக்கவில்லை, ஐநா வாக்கெடுப்பிலும் அந்நாட்டிற்கு எதிராக வாக்களிக்காமல் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

பேச்சுவார்த்தை நடத்த ஜெலன்ஸ்கி அழைப்பு
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று வெளியிட்ட வீடியோவில், ‘‘நேட்டோவில் நாங்கள் சேர மாட்டோம், ரஷ்ய படைகளை திரும்ப பெறுவது, உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்த ஒப்பந்தத்தை முடிவு செய்ய ரஷ்யாவுடன் பேச நாங்கள் தயாராக இருக்கிறோம். போர் நிறுத்தத்திற்கு பிறகு கிரிமியா, கிழக்கு டான்பாஸ் பகுதியின் நிலை மற்றும் பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்குவது குறித்து பேசத் தயார். அதிபர் புடினுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தாத வரை இப்போர் ஓய வாய்ப்பில்லை’’ என அவர் கூறி உள்ளார்.

ஹிட்லரிடம் தப்பித்தவர் புடினிடம் பலியான சோகம்
உக்ரைன் நாட்டை சேர்ந்தவர் போரிஸ் ரோமன்சென்கோ. இவர் உக்ரைன் நாட்டின் கார்கிவ் பகுதியில் வசித்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை ரஷ்ய ராணுவம் நடத்திய ஷெல் தாக்குதலில் இவர் உயிரிழந்தார். இவர் ஜெர்மனி நாட்டின் முன்னாள் சர்வாதிகாரி ஹிட்லர் நடத்திய 4 நாஜி வதை முகாம்களில் இருந்து தப்பியவர். தற்போது, 96 வயது வயதில் அதிபர் புடின் நடத்திய தாக்குதலில் பலியாகி உள்ளார். ஜெர்மனி நாடாளுமன்றத்தில், ரோமன்சென்கோவின் மறைவுக்கு அனைத்து எம்பிக்களும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.

Tags : Kiev ,Ukraine ,Mariupol , Russian forces stagnate, unable to advance in battle Kiev suburbs recaptured Ukraine: Terrorist attack continues in Mariupol
× RELATED ரஷ்ய மின்நிலையங்கள் மீது உக்ரைன்...