கேப்டன் லான்னிங் அபார சதம் ஆஸி.க்கு 6வது வெற்றி: தென் ஆப்ரிக்கவுக்கு முதல் சறுக்கல்

வெலிங்டன்: ஐசிசி மகளிர் உலக கோப்பை  லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 5 விக்கெட்  வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி தொடர்ச்சியாக 6வது வெற்றியை பதிவு செய்து அசத்தியது.பேசின் ரிசர்வ் மைதானத்தில் நேற்று  நடந்த இப்போட்டியில் (21வது லீக் ஆட்டம்), டாஸ் வென்ற ஆஸி. முதலில் பந்துவீசியது. தென் ஆப்ரிக்கா 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 271 ரன் குவித்தது. அந்த அணியின்  லாரா வுல்வார்ட்  90 ரன்,  கேப்டன் லுவஸ் 52, லிஸல் லீ  36,  மரிஸன்னே காப் 30* ரன் விளாசினர். ஆஸி. தரப்பில் மேகான் ஷுட், ஜெஸ், கார்ட்னர்,  அன்னபெல், அலனா தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.அடுத்து 272 ரன் எடுத்தால் வெற்றி என்ற சற்றே கடினமான இலக்குடன் களமிறங்கிய ஆஸி. அணி, கேப்டன் மெக் லான்னிங்கின் அபார சதத்தால் 45.2 ஓவரிலேயே 5 விக்கெட் இழப்புக்கு இல்லை எட்டியது. ரச்சேல் 17, அலிஸ்ஸா 5, பெத் மூனி 21, டாலியா மெக்ராத் 32,  கார்ட்னர் 22 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். லான்னிங் 135 ரன் (130 பந்து, 15 பவுண்டரி, 1 சிக்சர்), அன்னபெல் சதர்லேண்ட் 22 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். தெ.ஆப்ரிக்காவின் ஷப்னிம், அயபோங்கா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

இதுவரை விளையாடிய 6 லீக் ஆட்டங்களிலும் வென்றுள்ள ஆஸி. அணி புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து முதலிடம் வகிப்பதுடன், ஏற்கனவே அரையிறுதியை உறுதி செய்துவிட்டது. 5 ஆட்டங்களில் விளையாடி உள்ள தெ.ஆப்ரிக்காவுக்கு இது முதல் தோல்வியாகும். 2வது இடத்தில் இருக்கும் அந்த அணி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கிறது.

* ஒருநாள் போட்டிகளில் சேஸ் செய்து தொடர்ச்சியாக அதிக வெற்றிகளைக் குவித்த அணியாக ஆஸி. மகளிர் அணி உள்ளது. அந்த அணி 2018ம் ஆண்டு முதல் இதுவரை சேஸ் செய்த 18 ஆட்டங்களிலும் வெற்றி வாகை சூடியுள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் 17 வெற்றிகளுடன் இந்திய ஆடவர் அணி உள்ளது (2005-2006). தலா 15 வெற்றிகளுடன் இங்கிலாந்து (2008-2009), நியூசிலாந்து (2015-2017) மகளிர் அணிகளும், 14 வெற்றிகளுடன் வெஸ்ட் இண்டீஸ் ஆடவர் அணியும் (1985-1986) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

* ஆஸி. கேப்டன் லான்னிங் சேஸ் செய்த போட்டிகளில் தனது 10வது சதத்தை பதிவு செய்துள்ளார். அந்த வகையில் கோஹ்லி (22 சதம்), சச்சின் (14), ரோகித் (11) ஆகியோருக்கு அடுத்த இடத்தை அவர் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. உலக கோப்பையில் லான்னிங் தனது 3வது சதத்தை விளாசி உள்ளார்.

Related Stories: