ஜம்மு காஷ்மீர் விவகாரம் ஒன்றிய அரசின் செயல்பாடு அரசியலமைப்புக்கு எதிரானது: திமுக எம்பி மாநிலங்களவையில் ஆவேசம்

புதுடெல்லி: மாநிலங்களவையில் திமுக எம்பி ராஜேஷ்குமார், ஜம்மு காஷ்மீர் மாநில பட்ஜெட் மீதான துணை மானிய கோரிக்கை விவாதத்தில் பேசுகையில், ‘‘ஜம்மு காஷ்மீருக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு என்பது ஒரு எம்என்சி நிறுவனத்தின் பட்ஜெட்டுக்கு சமமாக இருக்கிறது. ஒரு மாநிலத்துக்கு ஒதுக்கப்படும் நிதி அளவு கூட கிடையாது. குறிப்பாக, ஜம்மு காஷ்மீரின் மாண்பு, கலாச்சாரம் ஆகியவை குறித்து எதுவும் இடம் பெறவில்லை. ஒன்றிய அரசின் இத்தகைய செயல் என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மாண்புக்கு எதிராக உள்ளது. ஜம்மு காஷ்மீர் என்பது வேலி பள்ளத்தாக்கு ஆகும். இது போன்ற பகுதியில் ஆவின், அமுல் போன்ற எந்தவொரு செயல்திட்டம் இல்லையென்பது மிகுந்த வேதனைக்குரியது. அதே போல, ஜம்மு காஷ்மீரில் சிறு,குறு தொழில் குறித்த எவ்வித அறிவிப்போ அல்லது அது சார்ந்த நிதி ஒதுக்கீடோ இந்த பட்ஜெட்டில் இடம் பெறவில்லை என்பது முக்கியமானது’’ என்றார்.

எம்பி ராஜேஷ்குமார் தனது மற்றொரு கேள்வியில், ‘‘ராணுவத்தில் எவ்வளவு காலி பணியிடங்கள் உள்ளது. குறிப்பாக எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர்களுக்கான வேலை வாய்ப்பில் எத்தனை நிலுவை பணியிடங்கள் உள்ளது. அதற்கான முழு விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும்’’ என கேட்டிருந்தார். இந்த கேள்விக்கு பதிலளித்த ஒன்றிய அமைச்சர், ‘‘இந்த கேள்விகளுக்கு முழு விவரங்கள் அடங்கிய தரவுகள் தற்போது இல்லை. இருப்பினும் துறை சார்ந்த அதிகாரிகளிடம் முழுமையாக விசாரித்து விரிவான அறிக்கையை விரைவில் கொடுக்கிறோம்’’ என தெரிவித்தார்.

Related Stories: