சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் ஏப்ரல் 13ம் தேதி வெளியாகிறது: ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் பீஸ்ட் படம், வரும் ஏப்ரல் 13ம் தேதி உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் வெளியாகிறது. இதை சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதையடுத்து ரசிகர்கள் பெரிதும் உற்சாகம் அடைந்து, இத்தகவலை தங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.சன் பிக்சர்ஸ் தயாரித்த சர்கார் படத்தில் நடித்திருந்த விஜய், தற்போது மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இதை சன் டிவி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பிரமாண்டமாக தயாரித்துள்ளார். கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் எழுதி இயக்கியுள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசை அமைத்துள்ளார். விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் யோகி பாபு, இயக்குனர் செல்வராகவன், ஷான் டாம் சாக்கோ, அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். நிர்மல் குமார் படத்தொகுப்பு செய்ய, ஜானி நடனப் பயிற்சி அளித்துள்ளார்.

இப்படத்தில் இடம்பெற்ற ‘அரபிக்குத்து’ என்ற பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். விஜய் பாடிய ‘ஜாலியோ ஜிம்கானா’ என்ற பாடலை கு.கார்த்திக் எழுதியுள்ளார். இவ்விரு பாடல்களும் வெளியாகி யூடியூப் டிரெண்டிங்கில் தொடர்ந்து முதலிடம் பிடித்தது. திரையுலகினர், விளையாட்டு வீரர்கள், ரசிகர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் ‘அரபிக்குத்து’ பாடல் காட்சியில் விஜய் நடனம் ஆடியிருந்ததைப் போல் தாங்களும் நடனம் ஆடிய வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வைரலாக்கினர்.

பீஸ்ட் படம் சென்சார் செய்யப்பட்டு யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இப்படம் 2 மணி நேரம் 35 நிமிடங்கள் ஓடும். இந்நிலையில், இப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இப்படம் வரும் ஏப்ரல் 13ம் தேதி உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் டிவிட்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, பீஸ்ட் படத்தின் போஸ்டர்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

Related Stories: