மேகதாதுவில் அணைகட்ட அனுமதி கோரி சட்ட பேரவையில் இன்று தீர்மானம்: கர்நாடகா முதல்வர் தகவல்

பெங்களூரு: தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சட்டத்திற்கு விரோதமானது; மேகதாது அணை கட்டுவதற்கு சட்ட வல்லுநர்கள் உதவியுடன் நடவடிக்கை எடுப்பதுடன் ஒன்றிய அரசு அனுமதி தரவேண்டும் என்பதை வலியுறுத்தி ஒரு மனதாக தீர்மானம் இன்று நிறைவேற்றப்படும் என முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்தார்.சட்ட பேரவையில் முதல்வர் பசவராஜ்பொம்மை பேசுகையில், ‘‘மேகதாது அணை கட்டுவதால் நமது கிராமங்கள் மூழ்கிவிடும். அதையும் நாம் சகித்து கொண்டு பெங்களூரு ,துமகூரு , சிக்கபள்ளாபுரா உள்ளிட்ட மாவட்டங்களுக்கு குடிநீர் அளிப்பதற்காக மேகதாது அணை கட்டுவதற்கு திட்டம் வகுக்கப்பட்டு அதை அமல்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.

மேகதாது அணை கட்டுவதால் தமிழகத்திற்கு எவ்வித பாதிப்பும் கிடையாது. அது மட்டும் இன்றி காவிரி இறுதி தீர்ப்பின்படி தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்கப்பட்டு விடும். காவிரி நீரை பயன்படுத்த தமிழகத்தின் அனுமதி நமக்கு தேவையில்லை; அதே நேரம் ஓகேனக்கல் குடிநீர் திட்டத்திற்கு தமிழக அரசு நம்மிடம் அனுமதி கேட்காத நிலையில் உபரி நீரை பயன்படுத்தி மேகதாது அணை கட்டும் நமது முடிவுக்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவிக்க எவ்வித உரிமையும் கிடையாது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சட்ட விரோதமானது.  தமிழக பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கண்டித்தும், மேகதாதுவில் அணை கட்ட அனுமதி கோரியும் இன்று தீர்மானம் நிறைவேற்றப்படும்’’ என்றார்.

Related Stories: