அதிமுக மாஜி அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு அச்சுறுத்தல் இல்லாததால் பாதுகாப்பு வாபஸ்: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு அச்சுறுத்தல் இல்லை என்று ஒன்றிய, மாநில உளவுத்துறை அறிக்கைகள் அளித்ததன் அடிப்படையிலேயே போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதாக தமிழக காவல்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2006ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நாளில் வீட்டின் முன் சகோதரர்கள், மைத்துனருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது ஒரு கும்பல் என் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியது. அதில் எனது மைத்துனர் கொல்லப்பட்டார். அதன் பிறகு எனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திடீரென அந்த பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. எனது துப்பாக்கி உரிமத்தை புதுப்பித்து தரவில்லை. தற்போது அந்த வழக்கு சாட்சி விசாரணை கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. பாதுகாப்பை விலக்கியதற்கான காரணத்தை கூறக் கோரியும், பாதுகாப்பு வழங்கக் கோரியும் அளித்த எனது மனுவை பரிசீலிக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் ஆஜராகி, கடந்த நவம்பர் மாதம் சி.வி.சண்முகத்துக்கான பாதுகாப்பை மறு ஆய்வு செய்தபோது, அவருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று தெரிய வந்தது. ஒன்றிய - மாநில உளவுப் பிரிவினரும், அவருக்கு அச்சுறுத்தல் ஏதும் இல்லை என்று  தெரிவித்துள்ளனர். சண்முகத்தின் பாதுகாப்பை விலக்கிக் கொண்டதற்கான காரணத்தை இரு வாரங்களில் அவருக்கு வழங்க உள்ளோம் என்றார்.

இதை ஏற்ற நீதிபதி, வழக்கின் விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.

Related Stories: