விண்ணப்பித்த 15 நாட்களில் ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது: எழும்பூர் பரந்தாமன் எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் சக்கரபாணி பதில்

பேரவையில் கேள்வி நேரத்தின்போது, எழும்பூர் எம்எல்ஏ பரந்தாமன் (திமுக): திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு குடும்ப அட்டைகள் பெறுவதற்காக விண்ணப்பிக்கப்பட்ட மனுக்கள் எத்தனை, வழங்கிய கார்டுகள் எத்தனை? அமைச்சர் சக்கரபாணி: திமுக அரசு பொறுப்பேற்றால், குடும்ப அட்டை வேண்டி யார் விண்ணப்பித்தாலும் தகுதியுள்ள நபருக்கு 15 நாட்களிலே குடும்ப அட்டை வழங்கப்படும் என்று அறிவித்தார். அந்த வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021ம் ஆண்டு மே மாதம் 7ம் தேதி பொறுப்பேற்றவுடன், 2021 மே மாதம் முதல் கடந்த 14ம் தேதி வரை 10  மாதங்களில் 15,74,543 விண்ணப்பங்கள் குடும்ப அட்டை வழங்க கோரி பெறப்பட்டது. இது பரிசீலிக்கப்பட்டு பின்னர் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் 10,92,064  பேருக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கி சாதனை படைத்திருக்கிறது.

பரந்தாமன்: எழும்பூர் பெரியமேடு பகுதியில் உள்ள நியாய விலை கடைகளில் முதியோர்களுக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்க பிஓஎஸ்-ஐ சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?

அமைச்சர் சக்கரபாணி: பிராக்ஸி முறைக்கு சென்று பொருட்கள் வழங்க ஒப்புதல் வழங்கப்படும். மேலும் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர், அவர்தம் பிரதிநிதிகள் வாயிலாக இன்றியமையா பண்டங்களை நியாய விலை கடைகளில் இருந்து பெறுவதற்கு ஏதுவாக மாவட்ட வழங்கல் அலுவலர், உதவி ஆணையர் (குடிமை பொருள் வழங்கல்) ஆகியோர் மூலமாக அங்கீகார சான்று வழங்கப்பட்டு வருகிறது. அவர்கள்  குடும்பத்தில் 5 வயதுக்கு மேற்பட்டோர் யாராக இருந்தாலும் அவர்கள் அந்த பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். விரல் ரேகை தேய்மானம் காரணமாக விரல் ரேகை சரிபார்ப்பு முறையை செயல்படுத்த இயலாத நேர்வில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தடையின்றி இன்றியமையா பண்டங்கள் விநியோகிக்க உரிய வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.

* ஓஏபி வாங்குகிறவர்களுக்கு ரேஷன் அட்டை ரத்தாகுமா?

பேரவையில் கேள்வி நேரத்தின்போது எழும்பூர் எம்எல்ஏ பரந்தாமன் (திமுக) பேசுகையில், ‘முதியோர் ஓய்வூதியத்தொகை (ஓஏபி) வாங்குகிறவர்களுக்கு குடும்ப அட்டை ரத்து செய்யப்படுமா’ என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் சக்கரபாணி,‘‘அப்படி எல்லாம் இல்லை. அவர்களுக்கும் அரசாங்கத்தின் மூலமாக பொருட்கள், 5 கிலோ அரிசி வழங்கப்பட்டு வருகிறது.

* அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல் 1.3 லட்சம் பேருக்கு ஒரே நாளில் நகை வழங்கப்பட்டது

ஒரே நாளில் மட்டும் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட 1.3 லட்சம் பேருக்கு நகை வழங்கப்பட்டுள்ளதாக பேரவையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.

சட்டப்பேரவையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தின் போது திருவாடனை எம்.எல்.ஏ ராம.கருமாணிக்கம் (காங்கிரஸ்) பேசியதாவது: கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டத்தை விரிவுபடுத்தி அனைத்து உரிமையாளர்களுக்கும் விரைந்து கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். கருவேல மரங்களை உடனடியாக அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி: நேற்று ஒருநாள் மட்டும் 1 லட்சத்து 3 ஆயிரம் பேருக்கு நகை வழங்கப்பட்டு ரசீதும் வழங்கப்பட்டு ரூ.823 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.  இவ்வாறு விவாதம் நடந்தது.

* அமைச்சர் ராமச்சந்திரன் தகவல் காட்டு பன்றிகளை சுட நடவடிக்கை

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது வேலூர் எம்எல்ஏ கார்த்திகேயன் (திமுக), ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் (அதிமுக) ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்கு வனத்துறை அமைச்சர்  ராமச்சந்திரன் பதில் அளித்து பேசியதாவது: 2022-23ம் ஆண்டு வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 75,94,900 மரக்கன்றுகள் நடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மேலும், தமிழகத்தில் வன பரப்பு, 33 சதவீதமாக உயர்த்தப்படும். 2030க்குள் 261 கோடி மரக்கன்றுகள் நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயப் பகுதிகளில் காட்டு பன்றிகளின் அத்துமீறல்களை கருத்தில் கொண்டு காட்டுப் பன்றிகளை சுடுவதற்கான அனுமதி ஒன்றிய அரசிடம் கோரப்பட்டுள்ளது. அனுமதி பெற்றவுடன் நடவடிக்கை எடுக்கப்படும்.

* தனிநபருக்கு ரேஷன் கார்டு வழங்கப்படுமா?

கேள்வி நேரத்தின்போது, எழும்பூர் தொகுதி எம்எல்ஏ பரந்தாமன் (திமுக): தனி நபர் குடும்ப அட்டை வழங்க அரசு முன்வருமா?

அமைச்சர் சக்கரபாணி: ஒரு நபர் தனியாக எவரையும்  சாராமல் வசித்து தனியாக சமைத்து உண்டு வருவாராயின் அவருக்கு தனி நபர் குடும்ப அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்த வகை குடும்ப அட்டைதாரருக்கு தேசிய உணவு பாதுகாப்பு சட்டப்படி நபர் ஒருவருக்கு 5 கிலோ அரிசி என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைவருக்கும் உணவு என்பதை உறுதிப்படுத்துவதற்காக அரசு 12 கிலோ அரிசியுடன், ஒரு பாக்கெட் பாமாயில், 1 கிலோ துவரம் பருப்பு, அரை கிலோ சர்க்கரை மற்றும் எரிவாயு இணைப்பு அடிப்படையில் மண்ணெண்ணெய் ஆகிய இன்றியமையா பொருட்களையும் மானிய விலையில் வழங்கி வருகிறது. இன்றைய தேதி வரையில் 19,71,807 அட்டை புழக்கத்தில் உள்ளது.

Related Stories: