×

ஆரணியில் இன்று காலை பரபரப்பு படியில் தொங்கி பயணித்த மாணவர்கள் பஸ்சை நிறுத்திய டிரைவரிடம் வாக்குவாதம்: கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை

ஆரணி: ஆரணியில் இருந்து செய்யாறுக்கு இன்று இயக்கிய பஸ்களின் படிகளில் தொங்கியபடி மாணவர்கள் சென்றதால் டிரைவர்கள் பஸ்சை நடுவழியில் நிறுத்திவிட்டனர். இதனால் டிரைவர், மாணவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆரணி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் செய்யாறு அரசு கலைக்கல்லூரி, ஐடிஐ, பாலிடெக்னிக்கில் படித்து வருகின்றனர். இதற்காக மாணவர்கள் அரசு பஸ்களில் இலவச பாஸ்களில் சென்று வருகின்றனர். இதற்காக தினமும் காலை 7 மணி முதல் அரை மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து 4 பஸ்கள் இயக்கப்படுகிறது.

ஆனால் கடந்த ஆண்டை விட தற்போதைய கல்வியாண்டில் கல்லூரிக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கூடுதல் பஸ்கள் இயக்காத நிலையில் படிகளில் தொங்கியபடி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் இன்று 3 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டது. இதனால் மாணவ, மாணவிகள் பலர் படியில் தொங்கியபடி சென்றனர். இரும்பேடு கூட்ரோடு அருகே செல்லும்போது அங்கிருந்த மாணவர்களும் பஸ்சில் ஏறி தொங்கியபடி சென்றனர். கூட்டம் அதிகரித்ததால் பஸ்சை இயக்க முடியாத நிலை ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனால் 2 பஸ்களின் டிரைவர்கள் பஸ்சை ஓரமாக நிறுத்திவிட்டு, படியில் யாரும் தொங்கக்கூடாது, அடுத்த பஸ்சில் வாருங்கள். அதிகளவு ஏற்றிச்சென்றால் விபத்து ஏற்படும்’ எனக்கூறினர். இதனால் மாணவர்கள், டிரைவர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பின்னால் வந்த ‘மகளிர் மட்டும்’ பஸ்சில் மாணவர்கள் ஏற முயன்றனர். ஆனால் அந்த பஸ்சின் டிரைவரும் பஸ்சை நிறுத்திவிட்டார். இதுகுறித்து தகவலறிந்து வந்த ஆரணி போக்குவரத்து பணிமனை ஊழியர்கள், மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவர்கள், ‘கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்’ எனக்கூறினர்.

இதையடுத்து கிளை மேலாளரிடம் கூறி கூடுதலாக ஒரு பஸ் வரவழைக்கப்பட்டது. அரை மணி நேரத்திற்கு பின்னர் அதில் மாணவர்கள் ஏறிச்சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து  போக்குவரத்து கழக ஊழியர்கள் கூறுகையில், வழக்கமாக ஆரணியில் இருந்து செய்யாறுக்கு 4 பஸ்கள் இயக்கப்படும். ஆனால் அதில் ஒரு பஸ்சின்  டிரைவர் திடீரென விடுமுறை எடுத்துக்கொண்டார். மாற்று டிரைவர் இல்லாதாதால் அந்த பஸ்சை இயக்க முடியவில்லை. தற்போது மாணவர்கள் நலன் கருதி வேறு பஸ்சில் பணியாற்றி வரும் டிரைவரை கொண்டு பஸ் இயக்கப்படுகிறது என்றனர்.

இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், ஆரணியில் இருந்து செய்யாறுக்கு செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பஸ் பாஸ் மூலம் செல்கிறோம். மேலும் மாம்பாக்கம் பகுதியில் இருந்தும் பள்ளி, கல்லூரிக்கு மாணவர்கள் வருகிறார்கள். இதனால்தான் படியில் தொங்கியபடி செல்லும் நிலை உள்ளது. எனவே, ஆரணியில் இருந்து செய்யாறுக்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து கூடுதலாக 2 பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

Tags : Orani , Arani, hanging on the stairs, students, bus, argument
× RELATED அனைவரும் ஓரணியில் உழைக்க வேண்டும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்